பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 152 ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதி மேஜர் ஷெப்பர்டு தலைமையில் முன் வலப்புறம் அமைக்கப்பெற்ற பாதைக்கு நேர் எதிரில் இடப்புறத்தில் - இரு நூறு அடி நீளமுள்ள புது வழி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்றும் கடுமையான துப்பாக்கிப் போர் நடைபெற்றது. ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி வெள்ளையர் படை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடையவில்லை. கடந்த சில தினங்களில் இரவெல்லாம் பெய்த மழையால் வெள்ளைப்படை துன்புற்றது. ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி கர்னல் இன்ஸ் தலைமையில் ஒரு படை புறப்பட்டது. திருமயத்திற்குச் சென்று பட்டினியால் வாடும் வெள்ளைப் பட்டாளத்திற்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதும், சென்ற இருபத்தைந்து நாள்களாக வெளி உலகத் தொடர்பு சிறிதும் இல்லாமல் துண்டிக்கப்பட்டிருந்த ஆங்கிலப்படையின் சார்பில் தபால்களை எடுத்துச் செல்வதுமே கர்னல் இன்ஸ் தலைமையில் புறப்பட்ட படையின் நோக்கம், அன்றைய தினத்தில் புதிய காவற்கொத்தளம் ஒன்றும் கட்டப்பட்டது. ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி மேஜர் ஷெப்பர்டு தலைமையில் வெளியே சென்ற படை, மருதிருவர் படையால் இரு புறங்களிலிருந்தும் சுடப்பட்டது. வெள்ளைத் தளபதிகளுள் ஒருவனான சாட்லர் என்பவன் கண்டு பிடித்த ஒரு புது விதத் துப்பாக்கிக்குப் பறங்கிப் படையைச் சார்ந்த ஒருவனே பலியானான். ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி விடுதலை வீரர்கள் வெள்ளை வெறியர்களை நேருக்கு நேர் நின்று கடுமையாகச் சுட்டார்கள். தங்கள் படை வீரர்களுள் ஒருவன் குண்டால் இருகூறாக்கப்பட்ட போதிலும், அவன் திருவுடலைப் பகைவர் கையில் விடாது சுமந்து சென்றார்கள் சுதந்தர வீரர்கள். அதுவன்றோ நாட்டுப்பற்று ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி திருமயம் சென்ற கர்னல் இன்ஸை உயிரோடு கொண்டு வந்து சேர்ப்பதற்காக இன்னொருபடை மேஜர் ஷெப்பர்டு தலைமையில் புறப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மருதிருவர் படை திருப்பத்துர்க் கோட்டையைப் பிடிக்க விரைந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக எச்சரிக்கையோடு இருந்த ஆங்கிலேயர்கள் மருதிருவர் வெற்றிக்கு இடம் தரவில்லை. ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி காட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு படைப்பிரிவு பட்டமங்கலத்தை அடைந்தது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி காட்டுக்குள் இருந்த படைக்கு உணவு கொண்டுவர வெளியே சென்ற பட்டாளங்களை மருது பாண்டியர் படை சுற்றி வளைத்துக் கொண்டு, மனஞ்சலிக்குமட்டும் வேட்டையாடிற்று.