பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.அடிமை அரசியலும் ஆர்க்காட்டுப் பொம்மையும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி தென்னாடெங்கும் பொலிவற்றுக் கிடந்தது. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இல்லாதார் ஆட்சிக்கு அருமைத் தமிழகம் இரையாகியது நாடெங்கும் ஆர்க்காட்டு நவாபுவின் தர்பார்தான் தழைத்தோங்கியது. 'விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யிடிக்கும் திறனுடையார்' என்று பாரதியார் போற்றிய தமிழ்ப் பார்த்திபர் மன்பதை முழுதும் வாழ்த்தி வணங்கச் செங்கோல் செலுத்திய செந்தமிழ் நாட்டின் ஆட்சி உரிமை, யார் யார் கைக்கோ எவ்வெவ்வாறோ போய்ச் சேர்ந்தது, விசயநகர நாயக்கர்கள் ஆட்சியில் தமிழ் நாடு பற்பல பிரிவுகளாகிச்சிதைந்தது. பாண்டி நாடுமட்டும் எழுபத்திரண்டு பாளையப்பட்டு களாகப் பிரிவுபட்டது. இவ்வாறு பிளவு பட்டுக் கிடந்த தமிழகத்தின் நிலை ஆர்க்காட்டு நவாபுவின் ஆட்சியில் தாறுமாறாயிற்று. அரசியல் அறிவும், விடுதலை வேட்கையும், ஆண்மைத் திறமும் அற்றவனாய் இருந்தான் ஆர்க்காட்டு நவாபு. இந்த உண்மையை உணர்ந்த கணக்கற்ற பாளையப்பட்டுகளில் குறு நிலத் தலைவருள் ஒவ்வொருவரும் சுதந்தர ஆட்சி நடத்தத் தொடங்கினர்; தமக்குள் ஒற்றுமைப் பண்பின்றிப் பூசலையும் பொறாமையையும் பெருக்கிக் கொண்டு, பிரிந்தும் பிணங்கியும் நிற்கலாயினர். ஊர் இரண்டுபட்டுக் கிடந்தால், கூத்தாடிக்குக் கும்மாளந்தானே? இத்தகைய சூழ்நிலையில் வெள்ளைக் கம்பெனியார் வஞ்சகச் செயல்புரிய வலை விரிக்கலாயினர். பரதேசி வெள்ளையர் விரித்த பாழான சூழ்ச்சி வலையில் அறிவும் ஆண்மையும் கெட்டுக் கிடந்த ஆர்க்காட்டு நவாபுவும் சிக்கினான். அதன் விளைவாக ஆங்கில ஆதிக்கம் சிறுகச்சிறுகப் பெருகி இறுகிய நிலையில் 1792-ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் ஆர்க்காட்டு நவாபுவிற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் எழுந்தது. ஆம். ஒப்பந்தம் என்ற பெயரால் ஆங்கிலக் கம்பெனிக்குத் தமிழகத்தை அடகு வைத்தான் ஆர்க்காட்டு நவாபு. ஆர்க்காட்டு நவாபு தான் பெற்ற கடனுக்காகத் தமிழகக் குறுநில மன்னர்களிடமிருந்து தன் பெயரால் கப்பப் பணத்தை வசூலித்துக் கொள்ளும் உரிமையைக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கே வழங்குவது.'