பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வீரபாண்டியன் மூட்டிய தீ பாளையக்காரர்கள் எல்லாம் பயங்கொள்ளிகள் என நினைத்த வெள்ளையர், எல்லாரையும் போல வீரபாண்டியனையும் எண்ணினர்; ஆனால், சாம்பலென்று கருதித்தாம் தொட்ட இடம், கை விரலைச் சுட்டுப் பொசுக்கும் வெந்தணலாயிருந்ததை அனுபவத்தால் அறிந்து கொண்டனர். 1760 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள், மூன்றாம் நாள் ஜகவீரக் கட்டபொம்மன் என்பானுக்கு மகனாய்த் தோன்றினான் நம் சுதந்தர வீரன் கட்டபொம்மன். இவனுடன் பிறந்த தம்பியர் இருவர். இவர்களே குமாரசாமியும் துரைச்சிங்கமும். இவருள் குமாரசாமி என்பான், நிகரற்ற வாள் வல்லமை படைத்தவன். ஆனால், திருத்தமுறப் பேசும் வாய் வல்லமை இல்லாதவன். எனவே, இவனை ஊமைத்துரை என மக்கள் உள்ளன்போடு வழங்குவார்கள். வீரபாண்டியன், 1790 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 2 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியின் வேந்தனானான். முப்பதே ஆண்டினனான வீரபாண்டியன் பாஞ்சாலங்குறிச்சியின் ஆட்சி உரிமை ஏற்ற நாளில் தமிழகத்தின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் முன்பே கண்டோம். நவாபுவின் தர்பாரில் சீமைத் துரைமார் இட்டதே நாடெங்கும் சட்டமாய் இருந்தது. செந்தமிழ் நாடு தன் விடுதலை ஒளி இழந்து அவர்கள் கையில் சிக்கித் தவித்தது. ஏழை எளிய மக்களை எல்லாம் வரி வரி' என்று வாட்டி வதைத்தார்கள் கம்பெனி அதிகாரிகள். உழவர்கள் வடித்த துயரக் கண்ணீரோ, அளப்பரியது. இந்நிலையில் பாளையக்காரர்களின் நிலையும் செக்கிலகப்பட்ட எள்ளாயிற்று. கப்பம் கப்பம்' என்று அவர்களைக் கசக்கிப் பிழிந்தார்கள் வெள்ளை அதிகாரிகள். மானத்தோடு வாழ்வதிலும் மண்ணாளும் பதவியே பெரிதென நினைத்த பாளையக்காரர் பலர், துரைமார் சொல்லுக்குத் தலைவணங்கிக் கைகட்டி வாழும் ஈன வாழ்க்கையையே இனிது என மேற்கொண்டனர். ஆனால், வீரபாண்டியனோ, இதற்கு விலக்கானான்; அடிமை என வாழ்வதிலும் அரசுரிமைக்காகப் போரிட்டு மடிவதே மேல் என உறுதி கொண்டான். கம்பெனி அதிகாரிகள் கட்டபொம்மனைப் பயமுறுத்திப் பணம் வசூலிக்க முயன்றார்கள் எங்கே கப்பம்? எடு' என்றார்கள். வீரபாண்டியன் கண்கள் சிவந்தன. கப்பமா எதற்குக் கப்பம்? வானம் பொழியுது. பூமி விளையுது. மன்னவன் காணிக்குக் கிஸ்தி ஏது? என்று அவ்வீரன் சிங்கம்