பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. களப்பலி கட்டுப்பாடு நிறைந்த பட்டாளமாயிருந்த மறவர் படை, நாலா திசைகளிலும் பிரிந்து போய்விட்டது. ஊமைத்துரை - மருது பாண்டியர்கள் விருப்பப்படி - திருமயம், திண்டுக்கல், சங்கரப்பதி முதலிய கோட்டைகளிலிருந்து புதியதொரு போராட்டத்திற்குத் தன்னையும் மக்களையும் ஆயத்தம் செய்வதே அப்படை வகுத்த திட்டம். அதன்படி தமிழகத்தின் கோட்டைகள் பலவற்றிலும் விடுதலை வீரர்கள் மறைந்து மறைந்து இருந்து தமிழ் மக்கள் நெஞ்சில் வீரபாண்டியக் கட்டபொம்மன் தூண்டி வைத்த விடுதலை விளக்கை அணையாவாறு காப்பாற்றும் வேலையில் முடுகி ஈடுபடலானார்கள். காற்றைப் போல எவர் கண்ணுக்கும் புலப்படாமல், ஆனால் சத்தி வாய்ந்த செயல்களைச் செய்யும் தீரர்களாய் அவர்கள் திகழ்ந்தார்கள். ஆயினும் என்ன? அயலார் - வெள்ளையர் - சூழ்ச்சி பலித்துவிட்டது. மருது பாண்டியரது கட்டுப்பாடான படை எட்டுத் திசைகளிலும் சிதறி ஒடச் சதி செய்தனர் வெள்ளையர். அச்சதி வென்றுவிட்டது. ஊமைத்துரை மட்டும் அடிக்கடி இந்த விடுதலை வீரர்கள் தங்கிவந்த கோட்டைகளுக்கு மாறுவேடம் பூண்டுபோய் வந்து கொண்டிருந்தான். இந்த உண்மையை எவ்வாறோ உய்த்துணர்ந்த தமிழ் மக்கள், தமிழ் நாட்டில் இருந்த பற்பல கோட்டைகளையும் ஊமையன் கோட்டை என்றே பயபத்தியோடு சுட்டிக் காட்டத் தொடங்கினார்கள். அப்பெயர்கள் இன்றும் நிலை பெற்று விளங்குகின்றன. இவ்வளவெல்லாம் இருந்தும், ஊமைத்துரையாலும் மருது பாண்டியராலும் இழந்த பலத்தை மீண்டும் பெற முடியவில்லை. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போன்று ஆயிற்று அவர்கள் கதை. வீரமிக்க மருது சகோதரர்கள், தங்கள் உயிரனைய உத்தமத் தோழர் - வீரர் - இருநூறு பேரோடு சங்கரப்பதிக் காடுகளில் கரந்துறையலானார்கள்: இந்நிலையில் கம்பெனியார் நாட்டு மக்கள் நெஞ்சில் பரப்பிய பொய்யும் பழியுமாகிய நஞ்சு, மிக விரைவாகச் செயற்படலாயிற்று. புதிய புதிய கதைகளைக் கம்பெனியார் நாளும் கட்டிவிட்டனர். புதிய புதிய பசப்பு மொழிகளை எங்கும் பரப்பிவிட்டனர். அவற்றுள் ஒன்று, கம்பெனியாருக்கு முதலில் சிறுதொகை செலுத்திப் பின் ஆண்டுதோறும் முறையாகக் குறைந்த வரி கட்ட ஆயத்தமாய் இருப்பவர்க்குச் சிவகங்கைச் சீமையில் பல கிராமங்கள் நிலையான கவுலாகக் கொடுக்கப்படும் என்பது. இச்செய்தியை