உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

செலவிட்டு ஏழாயிரம், ஐந்தாயிரம் ஏக்கரா நிலங்கள் பயன்பெறுகிற நேரத்தில், பன்னிரண்டு லட்ச ரூபாய் செலவில் பத்தாயிரம் ஏக்கர் பயன்பெறுகிற ஒரு குடகனாறு திட்டத்தை இதுவரை, இவ்வளவு கோரிக்கைகளுக்குப் பிறகும், அந்த வட்டாரத்துப் பொதுமக்கள் அத்தனைபேரும் மனுச் செய்து கொண்ட பிறகும், மந்திரிகள் வந்த நேரத்திலே அவர்களைத் தூது சென்று பார்த்த பிறகும் கவனிக்கப்படவில்லை என்பது மிகமிக வருந்தத்தக்க ஒன்று.

மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளையெல்லாம் கிழக்கு நோக்கித் திருப்புவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. பரம்பிக்குளத்துத் தண்ணீரை தமிழகத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு பெரும் முயற்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று சொல்லப்படுகிறதே தவிர, ஆனால், ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அந்தத் திட்டம் கவனிக்கப்பட்டு, பரம்பிக்குளம் தண்ணீர் பயன்பட முயற்சி எடுத்துக்கொள்ளப் படவில்லை.

இங்கே ஆறுகள் இல்லை, ஆகவே திட்டங்கள் இல்லை என்று கூறுவது, “ஆடத்தெரியாத ஒருத்தி முற்றம் கோணல்" என்று சொல்வதை ஒக்கும் என்று நான் குறிப்பிடுகிறேன். ஆறுகள் இல்லை என்றாலும், இருக்கிற ஆறுகளையாவது பயன்படுத்துகிற அத்தகைய எண்ணம் ஏன் பிறக்கவில்லை என்று நான் கேட்கின்றேன். புராணத்திலே படித்தது உண்டு- பகீரதனுக்காகப் பரமசிவன் ஆகாயத்திலிருந்து கங்கையை வரவழைத்தான் என்று. அப்படியிருக்க, பச்சைத் தமிழர் ஆட்சியில் பரம்பிகுளத் தண்ணீரைத்தானா வரவழைக்க முடியாது?-கொஞ்சம் எடுத்துப் பேசினால், உற்சாகத்தோடு அந்த வேலையில் ஈடுபட்டால்- ஆகாத காரியமா இது என்று நான் கேட்கிறேன்.

திட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் நிறைவேற்றப் படவேண்டும், நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள் இவ்வளவு காட்டியும் கூட, அவைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே என்று எதிர்க்கட்சிக்காரர்கள் பார்த்துச் சொன்னால், அந்தத் திட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும்.