உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

குடகனாறு திட்டம் அவசர அவசியமாக நிறைவேற்றப் படவேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன்.

வெள்ளையணைப் பகுதியில் சென்று மந்திரி அவர்கள் சுற்றிப் பார்த்தால் அங்கு இருக்கும் அவல நிலை தென்படும் என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன். குளித்தலை வட்டாரத்தில் 273 குளங்கள் இருக்கின்றன. அந்த 273 குளங்களில் வரும் மழைத் தண்ணீரைக் கொண்டு பெரும்பகுதி நிலத்தை நல்ல முறையிலே வளப்படுத்த முடியும். அதற்கான முயற்சிகளும் இந்த அரசாங்கத்தாரால் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று நான் கோருகிறேன்.

திட்டங்களைக் கூறிவிடுவதால் மாத்திரம் போதாது. அந்தத் திட்டங்களை நிறைவேற்றுகிற ஆற்றலும், அத்தகைய திறமையும் ஒரு அரசு பெற வேண்டுமென்றும், அப்படிப் பெற வேண்டிய நிலையைத்தான் வள்ளுவர் அவர்கள்- "கொடுங்கோன்மை” அதிகாரத்தில் அல்ல- “அமைச்சு” என்ற அதிகாரத்தில், மிக அழகாக எடுத்துச் சொல்லுகிறார்-

"முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர்”.

நல்ல திட்டங்களைப் போட்டாலுங்கூட, அந்தத் திட்டங்களை முறையாக எண்ணினாலுங்கூட, அந்தத் திட்டங்களை மூளியாகச் செய்து முடிப்பார்கள் திறமை இல்லாதவர்கள் என்று கூறியிருக்கிறார். நான் இந்த அரசாங்கத்தை, அப்படிச் செய்வார்கள் என்று கூறவில்லை அப்படி செய்யக் கூடாதென்றுதான் கூறுகிறேன். நாம் குறளை எடுத்துக் கூறினால், வல்லினம், மெல்லினம் தெரியாதவர்கள் குறள் பற்றிப் பேசுகிறார்கள் என்று கூறிவிடலாம் அமைச்சரவர்கள், வல்லினம் மெல்லினம் தெரிகிறதோ இல்லையோ - நான் சார்ந்த இனம் தமிழ் இனம், திராவிட இனம் என்று உயர்ந்திருக்கிறேன். அதை உணராதவர்களுக்கு அதை உணர்த்தி, இந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழகத்திற்கு உள்ளபடியே பயன்படுவதற்கு சென்னை மாநில அரசு உடனடியாக வேலை செய்யவேண்டு மென்று கேட்டுக்கொண்டு, என்னுடைய உரையை முடித்துக் கொள்கின்றேன்.