உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

463


ஆசிரியர்களுக்கு தடங்கல் இன்றி ஊதியங்கள் தருவதற்கு உதவும் பொருட்டு, ஊராட்சி ஒன்றியங்களுக்கு முன்னதாக மானியங்களை வழங்குவதற்கு மொத்தம் 3.12 கோடி ரூபாய் 17 ஆவது மானியத்தில் ஒதுக்கியுள்ளோம். உள்ளூர் மேல்வரி ஈட்டு மானியமாக 3.46 கோடி ரூபாய் ஊராட்சி ஒன்றியங்களுக்கு கூடுதலாக அளிப்பதற்கும் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மானியத்தில் ஏற்பட்டுள்ள மிச்சங்கள் போக மீதித் தொகையான சுமார் 70 இலட்சத்திற்கு 28ஆவது மானியக் கோரிக்கையில் இதற்கென ஒப்புதல் வேண்டியுள்ளோம்.

1,500-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு கூடுதலாக 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கமும், 1972ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிட்டு மேம்படுத்துவதில் இந்த ஆண்டுச் செலவான 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடும், துணை மதிப்பீடுகளில் அடங்கியுள்ள சாலைகள் பற்றிய பணிகளில் குறிப்பிடத் தக்கவை.

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு கூடுதலாக ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கவும், வெள்ளிவிழாக் கொண்டாடும் சென்னை தொழில்நுட்பக் கழகத்திற்கு ஆறு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தமிழாசிரியர்கள் பலரை முதல் நிலைத் தமிழாசிரியர்களாக நியமிப்பதற்கு ஏற்றவண்ணம் 23 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவிற்கும் மன்ற ஒப்புதல் வேண்டப்படுகிறது.

புதிதாக ஐந்து தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவுகளை அமைக்கவும், மொத்தம் 10 ஆய்வு-மதிப்பிடுதல்-சிகிச்சை (S.E.T.) பிரிவுகளை உருவாக்கவும் 8.48 இலட்சம் ரூபாய் 18 ஆவது மானியத்தில் இடம்பெற்றுள்ளது. குடிசை மாற்றுப் பகுதிகளில் மருத்துவ வசதிகளைச் சென்னை மாநகராட்சி தொடர்ந்து அளித்து வருவதற்காக ஒரு இலட்ச ரூபாய் செலவுக்கு வகை செய்ய அடையாள நிதி ஒதுக்கம் செய்யப் பட்டுள்ளது. அண்ணாநகர், தண்டையார்பேட்டை, ஆகிய இடங்களில் புதிதாக அமைக்க இருக்கும் புறநகர் மருத்துவ மனைகளுக்காக மொத்தம் 45 இலட்சம் ரூபாய் செலவிடவும் வகை செய்துள்ளோம். இதுவன்றி, பல்வேறு மருத்துவ மனைகளில் கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் வசதிகளுக்கும் பணிகளுக்கும் அவையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.