பக்கம்:மாபாரதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மாபாரதம்

“ஆறாகி இருதடங்கண் அஞ்சன வெம்
புனல் சோர அளகஞ் சோர
வேறான துகில் தகைந்த கைசோர
மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று
அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்துஊற உடல் புளகித்து
உள்ளமெலாம் உருகி னாளே”

என்பர் கவிஞர் வில்லிபுத்துரார்.

துச்சாதனன் அவள் கட்டியிருந்த சேலைகளைக் கஜக் கணக்கில் பார்த்தான்; ஆறு அல்லது எட்டு என்று நினைத்தான்; நிஜக்கணக்கில் அது வேறாக முடிந்தது. இழுக்க இழுக்க நீதிமன்ற வழக்குகள் போல் நீண்டு கொண்டே வந்தது. அவர்கள் வாதங்கள் போல நிறங்களும் மாறிமாறி வந்தன; அவன் கைகள் சலித்தன; கால்கள் தளர்ந்தன; மெய் அயர்ந்தது; மனம் சோர்ந்தான். அவன் களைத்து ஒய்ந்துவிட்டான்.

இந்த அற்புதத்தைக்கண்டு அவையோர் அஞ்சினர். தீண்டாத தெய்வக் கற்பினாள் இவள் என்பதை உணர்ந்து அவள் அடிகளுக்கு மலர்கள் தாவினர். அஞ்சலி செய்து ஆராதனை நிகழ்த்தினர். தனிமனிதன் தவறு செய்யலாம்; மானுடம் தவறக்கூடாது; அப்படித் தவறி னால் தெய்வம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை அந்நிகழ்ச்சி காட்டியது. கண்ணன் மானம் காத்தான் என் பதை நிதானமாக யூகித்து அறிந்தனர். அவையே ஆட்டம் கொடுத்தது; வெளியே கனல் தெறிக்கக் காற்று வீசியது; புரட்சிப் புயல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஊமை யராய்ச் செவிடர்களாக வாழ்ந்தவர் எல்லாம் எழுந்து அங்கிருந்த மேசை நாற்காலிகளைக் கால் தலை மாற்றினர். அவையில் ஆவேசக் குரல் எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/133&oldid=1047486" இலிருந்து மீள்விக்கப்பட்டது