பக்கம்:மாபாரதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

47

வணங்கி, அவன் காட்டிய குறிப்பு உணர்ந்து தான் கற்ற வித்தைகளை அவையோர் கண்டு வியக்கும்படி காட்டினான். கைகளில் வில்லும் அம்பும் ஏந்தினான்; மார்பில் கவசம் அணிந்து கொண்டான்.

ஓர் அம்பினால் யானையின் வடிவு தோற்றுவிப்பான்; மற்றோர் அம்பினால் யாளியைப் படைத்து அவ் யானையை அழிப்பான். இவ்வாறே பாம்பு, கருடன், நீர், நெருப்பு, இருள். சூரியன் இவ்வாறு மாறி மாறி அழிக்கத் தெய்வ அத்திரங்களை ஏவினான். அம்புகளில் பல வினோதங்களைச் செய்து காட்டினான். அவையோர் வியப்பு அடைந்தனர்.

கன்னன் அங்க பூபதி ஆதல்

வானத்து நட்சத்திரங்களைப் போலக் கூட்டமாக இருந்த அரசர்களின் முன்னே சூரிய குமரனான கன்னன் சங்கநாதம் என்று சொல்லும்படி வீர முழக்கம் செய்து அரங்கு நோக்கி அடி வைத்தான்.

தன் குருவாகிய பரசுராமனை மனத்தில் தியானித்து வணங்கிப் பின் அம்புகளைத் தொடுத்து அருச்சுனன் என்ன என்ன வில்திறன்களைச் செய்துகாட்டினானோ அவை அனைத்தையும் அவையோர் வியக்கும் வண்ணம் செய்து காட்டினான்.

கணைகள் போய் இலக்கைச் சரியாகத் தாக்கின. அதைக்கண்டு அரசர்கள் இவனை ‘இணையற்ற வீரன்’ என்று பாராட்டினார்கள். விசயன் தன்னினும் ஆற்றல் உடையவன் ஒருவன் இருப்பதைக் கண்டு சற்று நாணத்தால் தலைகுனிந்தான். துரியன் தன் தம்பிமாரோடு மிக்க களிப்பு அடைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/50&oldid=1048294" இலிருந்து மீள்விக்கப்பட்டது