பக்கம்:மாபாரதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மாபாரதம்

இன்னும் திராவிடம், சிங்களம். சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கெளடகம், குசலம் என்னும் பதினெண் தேசத்து அரசர்களையும் காட்டினர்.

இவர்கள் பட்டிமன்றத்துப் பார்வையாளர்கள் போல் அங்கே கட்டியிருந்த மண்டபத்தில் வீற்றிருந்தனர்.

“இவர்களுள் இலக்கினை வீழ்த்தி வெற்றி கொள்பவரையே நீ மாலை சூட்டி மணாளனாகத் தேர்ந்து எடுத்துக் கொள்வாய்” என்று செவிலியர் செப்பினர்.

அரசர்களின் அயர்ச்சி

முத்துப் போன்ற பற்களை உடைய திரெளபதியிடம் இவ்வாறு செவிலியர் சொல்லும்போது சித்திரம்போல் அசையாமல் தத்தம் ஆசனத்தில் இருந்தனர். ஆசனத்துக்கு அழகு கூட்டினர். துணிந்து அரசர்களில் சிலர் யானை போல்வார், யான், யான்’ என்று எழுந்தனர்.

யதுகுல வேந்தனாகிய வசுதேவன் பாண்டவர்கள் பார்ப்பன உருவில் வந்திருந்ததைப் பார்த்து விட்டு அதனைப் பலராமனிடம் சொன்னான். தம் குலத்து அரசரை வீண் முயற்சி செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினான். ஒரு சில அரசர்கள் வில்லை எடுக்க முடியாமல் அது பல்லை உடைக்கும் என்று வைத்து விட்டனர். இது மனுஷன் எடுப்பது அல்ல என்ற துவேஷத்தில் நீங்கினர். சல்லியன் வில்லை எடுத்தான்; நாண் ஏற்ற முடியாமல் வில்லோடு தானும் நாண் அற்றுக் கீழே விழுந்தான்; வீழ்ச்சியில் அவனுக்கு வில் துணை நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/79&oldid=1048318" இலிருந்து மீள்விக்கப்பட்டது