பக்கம்:மாபாரதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

89


அருச்சுனனின் தீர்த்த யாத்திரை
உலூபியை மணத்தல்

அருச்சுனன் தன் அண்ணன் மனைவியின் காலடிச் சிலம்புகளைக் கண்டதால் அவன் தீர்த்த யாத்திரையை மேற் கொண்டான். அந்தப் பயணத்தில் தெய்வச் சிந்த னையும் மனிதக் காதலும் மாறி மாறி அமைந்தன. முதற் கண் வட நாட்டு யாத்திரை அமைந்தது. விசயனின் விசயம் அழகியர் மூவரைக் கவர்ந்தது. ஆணழகன் என்ற புகழுக்கு உரியவன் ஆனான்.

கங்கை நீரில் நீராடித் தெய்வக் கோயிலை வழி படச் சென்றவன் நாகர் உலகத்துக் கன்னி அரை குறை ஆடையில் நீரில் முழுகி எழுந்த அழகின் நிழலைக் கண்டு தன் நெஞ்சைப் பறிகொடுத்தான். அவள் அவனைக் கங்கை நீர் வழியாகவே பாதளத்தில் இருந்த நாகர் உலகத்துக்கு அழைத்துச் சென்றாள். தலயாத்திரை பாதள யாத்திரையாக மாறியது.

விருந்துகள் பல நல்கி அருந்தச் செய்து இன்பத்தில் ஆழ்த்தினாள். இன்ப உலகம் என்ற ஓர் இடம் இருக்கிறது என்றால் அது நாகர் உலகம் எனக் கண்டான் வடி கட்டி எடுத்த அழகியரே அங்குக் குடி பெயர்ந்து தங்கினர். ஆணழகன் ஆகிய அருச்சுனன் அழகுக்காகவே ஒரு பெண்ணை விரும்பினான் என்றால் அவள் இந்த நாகர் உலகத்து உலூபி என்ற அழகிதான். இரவான் என்ற மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் பயணத்தில் இது முதற்கல்லாக இருந்தது. அங்கே அவன் எழுப்பிய காதல் மாளிகையில் கல்நாட்டு விழாவாக இம் மைந்தனை மகனாகப் பெற்று அங்கு விட்டு வைத்து வளரச் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/92&oldid=1036043" இலிருந்து மீள்விக்கப்பட்டது