பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுத் தெம்போடிருந்தது. மணிவண்ணன் முதுகில் ஏறி உட்கார்ந்தவுடன் அது துள்ளிப் பாய்ந்து ஓடியது. ஓட ஓட அது தன்னையறியாமலே காற்றில் பறக்கத் தொடங்கியது. மேக மண்டலங்களுக்கு இடையே புகுந்து பாய்ந்து உச்சயினிப் பட்டணத்தை அடைந்தது.

உச்சயினிப் பட்டணத்தின் அருகில் இருந்த பாலைவனத்திலே குதிரையை இறக்கினான் மணிவண்ணன். அந்தப் பாலைவனத்தின் ஓர் ஓரத்திலே இருந்த சுடுகாட்டை நோக்கிக் குதிரையை நடத்திக் கொண்டு சென்றான் மணிவண்ணன். அந்தச் சுடுகாட்டின் மத்தியிலே பறக்கும் நெருப்புப் பொறிகளைப் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்த பேய்களைக் கண்டான் மணிவண்ணன்.

வேறு யாருமாக இருந்தால் பேய்களைக் கண்டவுடனேயே கதி கலங்கிப் போயிருப்பார்கள். மணிவண்ணன் சிறிதும் அஞ்சாமல் அவற்றின் ஊடேயே நடந்து சென்றான்.

தேவதை கொடுத்த பொன் முடியை அவன் அணிந்திருந்ததால் அந்தப் பேய்களில் ஒன்று கூட அவனைக் காணமுடியவில்லை.

53