பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

மாயா விநோதப் பரதேசி

வருகிறீரா, அல்லது, நாங்கள் எங்கள் உத்தியோக தோரணைப்படி நடத்திக் கொள்ளலாமா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லும், இன்று காலை சுமார் 9½ மணிக்கு உம்முடைய தமையனார் வார்டர்களோடு எண்ணெய் விற்க, ஊருக்குள் போனவரை, யாரோ ஒரு பெண் பிள்ளையும் சில ஆட்களும் சேர்ந்து பலவந்தமாக விடுவித்துக் கொண்டு போய்விட்டார்களாம். அதைப்பற்றி எனக்கு இப்போது தான் தந்தி வந்தது. உடனே புறப்பட்டு வந்தேன். உம்முடைய தமையனார் இருக்கும் இடத்தை நீரே சொல்லுகிறீரா? அல்லது, நாங்களே தேடிப் பார்க்கலாமா? என்ன சொல்லுகிறீர்?” என்றார்.

அதைக் கேட்ட மாசிலாமணி முற்றிலும் பிரமிப்படைந்தவன் போலக் காணப்பட்டு நடுநடுங்கி, “எஜமானே! பிரமாணமாகச் சொல்லுகிறேன். என் தமையனார் இப்படிச் செய்தார் என்பது எனக்கு இப்போது நீங்கள் சொல்லத்தான் தெரிந்தது. நான் சொல்வதைத் தாங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தச் சதி ஆலோசனையில் நான் ஒரு அனுப்பிரமாணமும் சம்பந்தப்படவே இல்லை. என் தமையனார் இப்படி நடந்து கொள்ளுவார் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. நான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏதாவது அற்ப ருஜூவிருந்தாலும், நான் என் ஆயிசு காலம் முடிய சிறைச்சாலையில் இருக்கச் சம்மதிப்பதாக இப்போதே தங்களுக்கு எழுத்து மூலமான உறுதி வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்கிறேன். அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. தங்களுக்குப் பிரியமானால், தாங்கள் இந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் காலை 9½ மணிக்கு விடுவிக்கப்பட்டதாகச் சொல்லுகிறீர்கள் இப்போது மணி ஒன்றாகிறது. இதற்குள் ரயில் வருவதற்குக் கூட அவகாசம் இல்லையே. ஆகையால், அவர் ஒருவேளை தஞ்சாவூரிலேயே எங்கேயாவது இருப்பார், அல்லது, அதற்கும் இதற்கும் நடுவில் உள்ள ஏதாவது ஓர் ஊரில் இருப்பார்; இந்த ஊருக்கு வந்தே இருக்கமாட்டார். தேவையானால், தாங்கள் வீடு முழுவதையும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இதோ இருக்கிறது கொத்துச் சாவி. சில அறைகள் பூட்டப்