பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

125

வருவதாகவும், பாம்புகளைச் சித்தமாக வைத்திருக்கவும் சொல்லிப் பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன். உடனே பெட்டி முதலிய மற்ற சாமான்களையும், டைப் அடிக்க வேண்டிய கடிதம் முதலியவைகளையும் நாளைய தினமே முடித்து வைத்துக் கொள்ளுகிறேன். இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு குதிரை வண்டியும் அமர்த்திக் கொள்கிறேன். உப்பிலியப்பன் கோவிலில் பெட்டியை வாங்கிக் கொண்டு வெகு தூரத்திற்கு அப்பால் வந்த பிறகு அவ்விடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்திருக்கும் வண்டியில் ஏறிக்கொள்ளுகிறேன். உடனே வண்டியை விசையாக விட்டுக் கொண்டு மன்னார் கோயில் போய்ச் சேர்ந்து ஊருக்கு வெளியிலேயே இறங்கிக் கொண்டு, வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்தனுப்பி விட்டு, எங்கேயாவது இருந்து போலீஸ் எட்கான்ஸ்டேபிளின் உடுப்பைப் போட்டுக் கொண்டு உடனே அவனுடைய பங்களாவுக்குப் போய்க் காரியத்தை முடித்துவிட்டு வந்து உடுப்புகளை அவிழ்த்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு வேறு குதிரை வண்டி வைத்துக் கொண்டு திருத்தருப் பூண்டிக்குப் போய் அங்கிருந்து ரயிலேறி திருவாரூர், மாயூரம் வழியாக இங்கே வந்து விடுகிறேன். யாரும் என்னைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இந்த வேலையை நான் வெகு தந்திரமாக முடிக்கிறேன். இதைப்பற்றி எஜமான் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். ஆனால், நாம் சம்பந்தப்பட்ட வரையில் காரியத்திற்கு யாதொரு பழுதும் ஏற்படாமல் முடித்துவிட்டு வருவேன் என்பதை நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம். ஆனால் நாம் எதிர் பார்ப்பது போல மற்ற காரியங்களும் நிறைவேற வேண்டும். திகம்பரசாமியார் நிரம்பவும் சூட்சுமமான புத்தியுடைய மனிதன். எதிலும் சுலபத்தில் ஏமாறுகிறவன் அல்ல. அவனே தனியாக இருந்து பெட்டியைத் திறக்க வேண்டும். பாம்புகள் வெளியில் வந்து பயந்து சிதறி நாலாபக்கங்களிலும் ஓடி விட்டால், அவன் தப்பி ஓடிவிடுவான். அதெல்லாம் ஒழுங்காய் நிறைவேற வேண்டும். என்னவோ பார்க்கலாம். காரியம் பலிப்பது முக்காலே மூன்று வீசம் பங்கு நிச்சயம்.