பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

மாயா விநோதப் பரதேசி

செய்வதென்றால் நீங்களும் பட்டணத்தில் கொஞ்ச காலம் வாசம் செய்ய நேரும்.

மாசிலாமணி:- அது முடியாது. நான் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும். வேறே எங்கேயாவது போனால், போலீஸ் நாய்கள், நம்ம போகிற இடத்தைக் கேட்டுக் கொண்டு, அங்கே இருக்கிற போலீசாருக்கு எழுதுவார்கள். அவ்விடத்திலும் அவர்களுடைய உபத்திரவம் ஏற்படும். இங்கேயாவது நாம் அந்தப் பெண்ணை எவரும் கண்டுபிடிக்க முடியாத ரகசியமான இடத்தில் ஒளித்து வைக்கலாம். அங்கே நாம் அப்படிச் செய்ய முடியாது. அதுவும் அல்லாமல், நான் இங்கே இருந்து வேறே முக்கியமான பல காரியங்களைக் கவனிக்க வேண்டியவனாக இருப்பதால், நான் அந்தச் சிறுக்கிக்காக சென்னைப் பட்டணத்தில் வாசம் செய்ய முடியவே முடியாது.

இ. சேர்வைகாரன் :- அப்படியானால், நான் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்தப் பெண்ணை அவர்களுடைய பங்களாவில் இருந்து அபகரித்த உடனே, அதற்கு மயக்கம் உண்டாகும் படியாக குளோரபாரம் முதலிய மருந்துகளைப் பிரயோகித்து, மோட்டாரில் வைத்துக் கொண்டு ஒரே விசையாக ரஸ்தா வழியாகவே இந்த ஊருக்கு வந்துவிட வேண்டும். நடுவழியில் அவள் மயக்கம் தெளிந்து விழித்துக் கொண்டால், மறுபடியும் அதே வஸ்துவைக் கொடுத்துக் கிழே வீழ்த்தி இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டும். வண்டியின் பின்பக்கத்தில் கோஷா ஸ்திரீகளுக்காக வைக்கும் மறைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யாராவது நடுவில் விசாரித்தால், தஞ்சாவூர் கலெக்டர் ஆமதுடீன் சாயப்புவின் கோஷா மனைவி போகிறாள் என்று சொல்லி விடுவோம். நல்ல வேளையாக தஞ்சாவூரில் அந்தப் பெயருடைய சாயப்பு கலெக்டராக இருக்கிறார்.

மாசிலாமணி:- (சந்தோஷமாகச் சிரித்து) சபாஷ் சேர்வைகாரரே! உம்முடைய சமயோசித தந்திர ஞானத்தை நான் எப்படிப் புகழப் போகிறேன். புத்திசாலித் தனத்திலும் செளரியத்திலும் திகம்பர சாமியார்கூட உம்முடைய காலில் ஒட்டிய தூசிக்கும் நிகர் ஆக மாட்டான். அதிருக்கட்டும், நீர் எப்போது பட்டணம் போகிறீர்?