பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

மாயா விநோதப் பரதேசி

ஒன்றுபட்டு வேற்றுமையே பாராட்டாது மனமொத்து ஐக்கியம் அடைந்து பரஸ்பர வாத்சல்யமாகிய பெரும் பாசத்தினால் பிணிப்பட்டிருந்தாள். ஆதலால், அந்த அருங்குண நங்கை தனது மாமனார், மாமியார், புருஷன் ஆகிய எவருக்கும் எத்தகைய இழிவான பணிவிடையைச் செய்வதையும் கண்ணியக் குறைவாகக் கருதாமல், அதை ஒரு பெருத்த இன்பமாக மதித்து அளவற்ற உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் செய்து வந்தாள். ஆதலால், தனது மாமியாரினது புடவையைத் தைப்பதை அவள் ஒரு தெய்வத்திற்குப் பூஜை, நைவேத்தியம் முதலியவற்றைச் செய்து வைப்பது போன்ற பரிசுத்தமான ஒரு திருப்பணி போல மதித்து மிகுந்த பயபக்தி விநயத்தோடு அதைச் செய்து கொண்டிருந்தாள். எந்த நிமிஷத்திலும் அவளது சுந்தரவதனம் அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம் போல இனிமை, குளிர்ச்சி, ஜிலு ஜிலுப்பானகளை, வசீகரம், மந்தஹாசம் முதலியவை சதா காலமும் குடிகொண்டதாக இருந்து வந்தது. அவளது முகம் வாட்டத்தையாவது, விசனக்குறியையாவது காட்டிய சந்தர்ப்பம் முற்றிலும் அரிதாகவே இருந்தது. ஆனால் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிவந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்ட பிறகு, மேகப்படலங்கள் தோன்றி நிஷ்களங்கமாக இருக்கும் பூர்ணசந்திரனை மறைப்பது போல, அப்போதைக்கப்போது, அந்த உத்தமியின் முகம் கவலையையும் சிந்தனையையும் காட்டி மாறி மாறி வாட்டமடைந்தும் தனது இயற்கை ஒளியை வீசிக்கொண்டும் இருந்தது. சட்டைநாத பிள்ளை முதலிய துஷ்டர்கள் தண்டனை அடைந்து சிறைச்சாலை புகுந்த பின்னர், அவள் அவர்களைப் பற்றிய நினைவையும், தான் தனது பதினாறாவது வயது வரையில் அவர்களது வசத்தில் இருந்து வளர்ந்து வந்த நினைவையும் அறவே மறந்து, துன்பமே கலவாத இன்பம் அனுபவித்து வந்தவள். ஆதலால், தங்களது பகைவர்களுள் முக்கியஸ்தரான சட்டைநாத பிள்ளை தப்பி ஓடி வந்து விட்டார் என்ற செய்தி, தேவாமிர்தம் நிறைந்திருந்த பாத்திரத்தில் காலகோடி விஷத்துளி ஒன்று வந்து கலந்து கொண்டது போல அவளது மனதின் நன்னிலைமையை முற்றிலும் சீர்குலைத்து விட்டது.