பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மாயா விநோதப் பரதேசி

நிறுத்தி நாம் எதை விரும்புகிறோமோ அதைப்பற்றி நினைக்கவும், எதை விலக்குகிறோமோ அதைப்பற்றி நினைக்காமல் விட்டுவிடவும் செய்வது சாத்தியமற்ற காரியமாக அல்லவா இருக்கிறது. அந்தத் துஷ்டன் சட்டைநாத பிள்ளை வெளியில் வந்துவிட்டான் என்ற சங்கதியைக் கேட்ட பிறகும், நாம் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சுவாமியார் செய்தி சொல்லி அனுப்பியதைக் கேட்ட பிறகும், இந்தக் கவலை அடிக்கடி என் மனசில் தோன்றி வதைத்துக் கொண்டிருக்கிறது. நான் எவ்வளவு பாடுபட்டாலும், இந்தக் கவலை விலகமாட்டேன் என்கிறது. அந்தத் துஷ்டனை மறுபடி பிடித்துச் சிறைச்சாலையில் அடைக்கிற வரையில் இந்தக் கவலை இருந்து கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள்.

கண்ணப்பா, “வாஸ்தவம் தான். நம்முடைய சுவாமியார் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். எப்படியும் அவன் கூடிய சீக்கிரம் பிடிபட்டு மறுபடி சிறைச்சாலைக்குப் போய்ச் சேர்ந்து விடுவான். அவனால் நமக்கு அதிக கெடுதல் ஒன்றும் நேராதென்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும், உன்னைத் தனிமையில் விட்டிருப்பதும் தவறென்று நினைக்கிறேன். நானாவது, அம்மாளாவது எப்போதும் உன்னோடு கூடவே இருந்தால் உன் மனம் வேறே விஷயங்களில் சென்று கொண்டிருக்கும். இதைப்பற்றி நீ நினைக்காமல் நாங்கள் உன் மனசுக்கு வேறே வேலை கொடுத்துக் கொண்டிருப்போம். உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் உனக்குத் துன்பம் கொடுக்கும் உன் மனசை அடக்க அதுதான் சரியான வழி. இனி நான் அப்படியே செய்கிறேன். இந்த விஷயத்தை அம்மாளிடம் சொல்லி எச்சரித்து வைக்கிறேன். அது போகட்டும். எனக்குத் தாகமாக இருக்கிறது. நீ கீழே போய்க் கொஞ்சம் சுத்த ஜலம் எடுத்துக் கொண்டுவா?” என்று நிரம்பவும் நயமாகவும் அன்பாகவும் கூறினான். அதைக் கேட்ட மாதரசி பலகையை விட்டு சடக்கென்று கீழே இறங்கி விரைவாக நடந்து படிக்கட்டை அடைந்து, படிகளின் வழியாகக் கீழே இறங்கி மறைந்து போனாள்.