பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மாயா விநோதப் பரதேசி

தமிழ்ப் பாஷையில் ‘ஸ்’ என்ற எழுத்தை சகலமான இடங்களிலும் எதேஷ்டமாகப் பிரயோகிப்பது சர்வ சாதாரணமாகப் போய்விட்ட தாகையால், அவர்களிடம் பயின்ற நமது மனோன்மணியிடத்திலும் அந்த லட்சணம் பூர்த்தியாக நிறைந்திருந்தது. உதாரணமாக, அவள் தன்னுடைய வேலைக்காரியை அழைத்து ஏதாவது உத்தரவிட வேண்டுமானால், “அடீ லெம்பகம்! நம்முடைய தோட்டக்கார ஸொக்கலிங்கனிடம் போய் ஒரு ரோஸாப்பூ மாலை ஸெய்ய ஸொல்லு. நல்ல வாஸனையுள்ள புஸ்பமாய்ப் பார்த்து ஸேர்த்துக் கட்டஸொல்லு” என்று அவளது வார்த்தைகள் நம்முடைய செவிகளில் தொனிக்கும். அவள் நடை உடை பாவனை முதலிய வெளிப்படையான விஷயங்களில் அத்தகைய மாறுபாடுகள் உடையவளாகத் தோன்றினாலும், மனவுறுதி தேக பரிசுத்தம் முதலிய அடிப்படையான அம்சங்களில் நிஷ்களங்கமானவளாக இருந்தாள். அன்னிய மனிதரைக் கண்டு ஸ்திரீகள் நாணி மறைவது அநாவசியம் என்றும், அது அக்ஞான நிலைமையில் இருப்பவரே செய்யத் தகுந்த காரியம் என்றும் அவள் நினைத்திருந்தாள். தான் உண்மையாகவும் நேரான வழியிலும் நடக்க வேண்டும், தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியான கொள்கைகள் அவளிடம் வேரூன்றி இருந்தது நன்றாகத் தெரிந்தது. மற்றபடி அன்னியரைக் கண்டு தான் நாணுவதாவது, அஞ்சுவதாவது அநாகரிகமான செய்கை என்பது அவளுடைய உறுதியான கோட்பாடு. ஜாதிமதம் என்ற வித்தியாசங்களே தப்பான ஏற்பாடுகள் என்பதும் அவளுடைய எண்ணம். மனிதர் சுத்தமான உடை உடுத்தி பார்ப்பதற்கு விகாரம் இல்லாமல் இருந்தால், அவர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற நினைவையும் அவள் கொண்டிருந்தாள். தவிர, அவள் எப்போதும், செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்து வளர்ந்தவள் ஆதலால், அவளது புத்தி அற்ப விஷயங்களில் எல்லாம் செல்லாமல் பெரும் போக்காகவே இருந்தது. அவள் வீணை முதலிய ஏதாவது சிறந்த சங்கீத வாத்தியத்தில் தேர்ச்சியடைய வேண்டும் என்பது அவளது தந்தையின் விருப்பம். ஆனாலும், அவளது கவனம் பொழுது முதலியவை முழுதும் இங்கிலிஷ்