பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

101


சோபிக்காது. நிச்சயதார்த்தம் வெள்ளிக்கிழமை பகலிலோ, அல்லது, மாலையிலோ நடக்கும். அன்றைய தினம் இரவிலேயே நாம் இந்த மன்னார்குடியார்களை எல்லாம் அங்கஹீனப்படுத்தி விட வேண்டும். சம்பந்தியின் ஊரிலேயே எல்லா ஜனங்களுக்கும் மத்தியில், அவர்கள் மானபங்கப்பட்டால், அதை அவர்கள் சகிக்க மாட்டாமல் உயிரைவிட்டாலும் விட்டுவிடுவார்கள். தம்முடைய பெண்ணைக் கட்ட வந்திருக்கும் சம்பந்திகள் மானபங்கம் அடைந்தார்கள் என்பதைப் பட்டாபிராம பிள்ளை நேரிலேயே கண்டு அந்தச் சுகத்தை அனுபவிக்க வேண்டும். அதுதான் சரியான காரியம்.

இ. சேர்வைகாரன்:- அப்படியானால், நாங்கள் எல்லோரும் சென்னப்பட்டணத்திற்குப் போயிருந்து, வெள்ளிக்கிழமை இரவில் இதை நடத்த வேண்டும்.

மாசிலாமணி:- ஆம். அப்படித்தான் செய்ய வேண்டும்.

இ. சேர்வைகாரன்:- (சிறிது நேரம் யோசனை செய்து) இவர்கள் போய்க் கோமளேசுவரன் பேட்டையில் கந்தசாமி இருக்கும் வீட்டில் அல்லவா தங்கப்போவதாகக் கேள்வியுற்றோம். இவர்கள் சுமார் ஐம்பது பேர் சேர்ந்து போகப் போகிறதாகவும் நம்முடைய ஆள் சொன்னான் அல்லவா. அத்தனை பேரும் அன்றைய தினம் இரவில் அந்த வீட்டில்தானே படுத்திருப்பார்கள். அவ்வளவு பெரிய ஜனக் கும்பலில் நாம் நம்முடைய கோரிக்கையை நிறை வேற்றுவது என்றால், அது சுலபத்தில் முடியுமா? அதுவுமன்றி நான் கண்ணப்பா, கந்தசாமி, வேலாயுதம் பிள்ளை ஆகிய மூன்று பேரையும் தான் பார்த்திருக்கிறேன். வடிவாம்பாளையும் வேலாயுதம் பிள்ளையின் சம்சாரத்தையும் நான் பார்த்ததே இல்லை. என்னுடைய ஆள்கள் கண்ணப்பா முதலிய ஆண் பிள்ளைகளைக் கூடப் பார்த்தவர்கள் அன்று. ஆகையால் அவ்வளவு பெரிய ஜனக்கும்பலில் இரவில் போய் நாம் உத்தேசிக்கும் மனிதர்களுடைய அடையாளத்தை எப்படிக் கண்டு பிடித்து வேலையை முடிக்கப் போகிறோம். அதுதான் எனக்கு நிரம்பவும் மலைப்பாக இருக்கிறது.