பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

103


தாழ்ப்பாளைத் திறந்துவிடுவாள். அப்போது நீங்கள் சுமார் பத்துபேர் தயாராக இருந்து இவளோடுகூட உள்ளே போங்கள். நாம் உத்தேசிக்கும் ஐந்து பேரையும் இவள் காட்டிக் கொண்டே போவாள். ஒவ்வொருவருக்கும் பக்கத்திலும் இரண்டிரண்டு ஆள்கள் நின்ற பிறகு, எல்லா ஆள்களும் ஒரே காலத்தில் ஆரம்பித்து பொறித்தட்டும் நேரத்திற்குள் ஐந்து பேரையும் மூளிப்படுத்திவிட வேண்டும். உடனே எல்லோரும் கூச்சலிட்டுக் கொண்டு தாறுமாறாக எழுந்திருப்பார்கள். அப்போது அவ்விடத்தில் பெரிய குழப்பம் ஏற்படும். அந்தச் சமயத்தில் நீங்கள் எல்லோரும் தப்பித்து வெளியில் வந்து விடுங்கள். நம்முடைய ரமாமணியும் அதன்பிறகு அந்த அமர்க்களத்தில் எப்படியாவது நழுவி வந்து விடட்டும். நீங்கள் துணிந்து இந்தக் காரியத்தை முடித்து விட்டால் அதுவே போதுமானது. இந்த மானக்கேட்டைப் போல இந்த உலகத்தில் வேறே யாருக்கும் எந்தக் காலத்திலும் நேர்ந்திருக்கவே இருக்காது. அதனால் நமக்கு ஏற்படும் ஆனந்தத்திற்கும் ஈடு இந்த உலகத்தில் இருக்கும் என்று நினைக்கவில்லை. தேவரே! என்ன சொல்லுகிறீர்? இதை முடிக்க உம்மாலாகுமா? என்ன பலமாக யோசிக்கிறீரே! இதை நடத்த பயமாக இருக்கிறதா?

இ. சேர்வைகாரன்:- என்ன எஜமானே! என்னைப் பார்த்து இப்படிச் சொல்லுகிறீர்களே! நானா பயப்படுகிறவன்? பயம் என்பது என்னைக் கண்டே பயப்பட வேண்டுமன்றி, நான் எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலும் பயப்படக் கூடியவனே அன்று என்பது தங்களுக்குத் தெரிந்திருந்தும் தாங்கள் இப்படிப் பேசுவது சரியல்ல. என் உயிர் போவதானாலும், எனக்கு சர்க்கார் தண்டனை கிடைப்பதானாலும், நான் அதற்கெல்லாம் கொஞ்சமும் அஞ்சுகிறவனல்ல. என்னுடைய உயிரை நான் திரணமாத்திரம் மதிக்கவில்லை, என்னுடைய ஆள்கள் என்னைவிடப் பதின் மடங்கு அதிக தைரியசாலிகள். ஆகையால், நாங்கள் எங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையாவது அச்சமாவது கொள்ளுகிற வர்களே அல்ல. இதைத் தாங்கள் உறுதியாக மனசில் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் இப்போது சொன்ன யோசனைப்படி நாங்கள் நடந்து கொள்ளத் தடையில்லை. அப்படிச் செய்வது மாத்திரம் போதாது. நாங்கள்