பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

131

சொன்னேன்? உங்களை விட்டுப் பிரிந்து நான் போவது எனக்குப் பெருத்த துன்பமாக இருந்து வதைக்குமே. அப்படி இருக்க, எனக்குப் பட்டணத்தில் இன்பம் எங்கிருந்து உண்டாகப் போகிறது? நீங்கள் இல்லாத காலத்தில், தேவேந்திர போகமும் எனக்குக் கசக்குமே அன்றி, என் மனசை எள்ளளவும் ரஞ்சிக்கா தென்பதைத் தாங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளுங்கள்" என்றான். மாசிலாமணி முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த மன எழுச்சி அடைந்து மெய்ம்மறந்து போய், "சரி; எப்படியாவது இருக்கட்டும். நான் இந்தச் சமயத்தில் இந்த ஊரை விட்டு வர முடியவில்லை. நான் வரவில்லை என்பதைக் கருதி நீ போகாமல் இருக்க முடியாது. பட்டணத்தில் நீ இன்பம் அனுபவிப்ப தானாலும், துன்பம் அனுபவிப்பதானாலும், எப்படியும் நீ அவசியம் போய் இந்தக் காரியத்தை முடித்தே தீர வேண்டும்" என்றான்.

அதைக் கேட்ட ரமாமணி, "அந்தக் காரியம் வெள்ளிக்கிழமை இரவோடு முடிந்து போகக் கூடியதுதானே; ஒரு நாளைக்கு நீங்களும் என்னோடு வந்தால் என்ன? அதற்குள் இங்கே என்ன மோசம் முழுகிப் போய்விடப் போகிறது" என்று குழந்தை போலக் கொஞ்சிப் பேசினாள். மாசிலாமணி, "அந்தக் காரியம் ஒரே இரவில் ஐந்து நிமிஷத்தில் முடிந்து போகப் போகிறது. ஆனாலும், நான் வியாழக்கிழமையே இங்கே இருந்து புறப்பட வேண்டும். அவ்விடத்தில் சனிக்கிழமை தினம் வண்டி ஏறி ஞாயிற்றுக்கிழமை தான் இங்கே வரமுடியும். இதற்கென்று பட்டணம் போகும் நாம் அந்த ஊரில் உள்ள வேடிக்கைகளை எல்லாம் பார்க்காமல் வந்து விட்டால், மறுபடி நாம் எந்தக் காலத்தில் போகப் போகிறோம் என்பது நிச்சயமில்லை. அப்படியே நாம் அவசரப்பட்டு வந்தாலும் கூட, நான் மூன்று தினங்கள் ஊரைவிட்டுப் போவதென்றால், போலீசாரிடம் தெரிவித்துவிட்டுப் போக வேண்டும். இல்லாவிடில், அவர்கள் சந்தேகங் கொள்வார்கள். நான் பட்டணம் போகிறேன் என்று அவர்களிடம் வெளியிட்டே தீர வேண்டும். நான் அதை