பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

171

வெகுநேரம் வரையில் ஊறியிருந்து நீராடி தகத்தகாயமாக மின்னிய பனாரீஸ் பட்டு வஸ்திரமுடுத்தி, கேசத்திற்கு வாசனைத் தைலமூட்டி அழகாய் வாரிவிட்டு, புருவத்தில் ஜவ்வாதணிந்து, கண்ணிமைகளில் மைதீட்டி, நெற்றியில் அம்பர் கலந்த கஸ்தூாரி திலகம் வைத்து, காதில் வைரக் கடுக்கன்கள், பத்து விரல்களிலும் வைரமோதிரங்கள், கழுத்தில் வைர ஹாரங்கள், கையில் நவரத்னமிழைத்த காப்பு கொலுசுகள் முதலிய ஆபரணங்களை நிறைத்துக் கொண்டு ராஜ்ய பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாகும் யுவராஜன் போலத் தேஜோமயமாக விளங்கினான்.

தன்னையும் தனது சயன மாளிகையையும் அவ்வளவு நேர்த்தி யாகவும் அபூர்வமாகவும் அலங்கரித்துக் கொண்ட மாசிலாமணி, அந்த முகூர்த்தத்திற்கு அத்யாவசியமான ஜீவாதார வஸ்துவாகிய சோபனப் பெண்ணை எவ்வளவு புதுமையாகவும் அற்புதமாகவும் அலங்கரிக்கச் செய்திருப்பானென்பது கூறாமலே விளங்கும். நமது கந்தசாமி சிறை வைக்கப்பட்டிருந்த விடுதியில் முன்னர் குறிக்கப்பட்ட வேலைக்காரி அன்றைய தினம் பிற் பகலிலேயே வந்து, இரவு சரியாக எட்டு மணிக்கு நல்ல சுப முகூர்த்த காலம் வருகிறதாகையால், அந்த வேளை தவறாமல் சோபன முகூர்த்தம் நிறைவேற வேண்டுமென்று தமது எஜமானர் தெரிவித்ததாகக் கூறி, ஏராளமான புதிய ஆடைகளையும் ஒரு ஜோடிப்பு வைர ஆபரணங்களையும் கொணர்ந்து வைத்து, அவனது நீரோட்டத்திற்கு வாசனை கலந்த பன்னீரை ஒரு தொட்டியில் நிரப்பிவைத்து, இன்னம் கூந்தல் தைலம், களப கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்களையும், அலங்காரத்திற்குத் தேவையான வஸ்துக்களையும் ஏராளமாகக் கொணர்ந்து பரப்பி, ஸ்நானம், அலங்காரம் முதலியவை நடப்பதற்குத் தானும் உதவி செய்வதாகக் கூறினாள். அதைக் கேட்ட கந்தசாமி மிகுந்த நாணமடைந்தவன் போல நடித்து அந்த வேலைக்காரியை நோக்கி, “சரி! எஜமானருடைய பிரியப்படி நான் ஸ்நானம் அலங்காரம் முதலியவைகளை முடித்துக்கொண்டு தயாராக இருக்கின்றேன். இந்தக் காரியங்களுக்கெல்லாம் வேறே ஒருவருடைய உதவி கூட வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் நானாகவே சுலபத்தில் முடித்துக் கொள்ளுகிறேன். நீ சரியாக ஏழே முக்கால் மணிக்கு