பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

மாயா விநோதப் பரதேசி

ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அத்தர்களின் வாசனையும், ரோஜா, ஜாதிமல்லிகை முதலியவற்றின் வாசனையும், பன்னி முதலிய வற்றின் மணமும் ஒன்றுகூடி அடர்ந்து குபிரென்று அவனது நாசியில் தாக்கி ஒரே நொடியில் அவனது மனத்தை மயக்கின. வெண்கலச்சிலைகள் உதிர்த்துவிட்ட அத்தர்த் திவலைகளும் மின்சார விசிறிகள் சுழல்வதால் உண்டான இனிமையான காற்றும் ஒன்றுகூடி நாற்புறங்களிலும் வந்து அவன் மீது தாக்கவே, அவனது ஐம்புலன்களும் ஒரு நிமிஷநேரம் பிரம்மானந்த நிலையில் தோய்ந்து நின்றன. அவன் நாலா பக்கங்களிலும் திரும்பி நோக்கி ஆங்காங்கு காணப்பட்ட விநோதங்களை ஒவ்வொன்றாய்ப் பார்த்து இன்புற்றவனாய் நடந்துபோய்க் கட்டிலண்டை நெருங்கி, அதை உற்றுநோக்கி, அதன் அரிய வேலைப்பாடுகளைப் பார்த்துப் பார்த்து அளவற்ற ஆச்சரியமும் வியப்பும் அடைந்தவனாய், அந்த விஷயங்களில் மாசிலாமணிக்கு ஏற்பட்டிருந்த உலக அனுபவத்தையும் திறமையையும் தனக்குத் தானே மெச்சிக்கொண்டவனாய், முத்துக்கட்டிலை நன்றாக ஆராய்ச்சி செய்தபடி ஐந்து நிமிஷ நேரம் நின்றபின் தற்செயலாக மேல் பக்கத்தில் நிமிர்ந்து பார்த்தான். பார்க்கவே, அவனது வியப்பும் மகிழ்ச்சியும் முன்னிலும் நூறுமடங்கு அதிகரித்து அபாரமாகப் பெருகின. மேலே நோக்கிய தனது விழியை அவ்விடத்தை விட்டு வாங்க வல்லமையற்றவனாய் நமது கந்தசாமி, "ஆகா பேஷ்! இவ்வளவு அற்புதமான அலங்காரத்தை நான் என் ஆயிசு காலத்தில் இன்றைய தினந்தான் பார்க்கிறேன். மாசிலாமணியை முட்டாளென்று நினைப்பது சரியல்ல. இவனுடைய மூளை அபாரசக்தி வாய்ந்தது என்பதற்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இவன் தன்னுடைய திறமையையும் யுக்திகளையும் வேறே உபயோகமான நல்ல வழிகளில் செலவழித்துப் பயன்படுத்தி இருந்தால், உலகு நிறைந்ததும் என்றைக்கும் மாறாததுமான பெரும் புகழை இவன் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். அவ்வள வையும் இவன் இப்படிப்பட்ட துன்மார்க்கங்களில் உபயோகிப்பதால், அது குடத்திற்குள் வைத்த விளக்குபோல ஒளிமழுங்கித் தோன்றுவதோடு, அவனுக்கே கெடுதலையும் உண்டாக்குகிறது. இத்தனை ஏற்பாடுகளும் அலங்காரங்களும் ஒரு நாளில் முடியக்