பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

229

வரலாற்றை நன்றாக விசாரித்து மறுபடி எழுதுகிறேன் என்று நான் நேற்று தெரிவித்தேன் அல்லவா; அந்த விஷயத்தைப் பூர்த்தியாகத் தெரிந்து கொள்ளாமல் வீட்டில் இருக்க என் மனம் இடந்தரவே இல்லை. ஆகையால், நான் உடனே புறப்பட்டு சென்னை கலெக்டர் பட்டாபிராம பிள்ளையின் ஜாகைக்குப் போய்ச் சேர்ந்து கலெக்டரைக் கண்டு பேசி போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த பயங்கரமான காட்சியை விவரித்துக் கூறினேன். அதைக் கேட்டவுடனே, நான் ஒருவேளை பைத்தியம் கொண்டவனோ என்று அவர் சந்தேகித்தவர் போலப் பேசினார். ஆனால், நான் மறுபடியும் அதை உறுதியாகச் சொன்னதைக் கேட்டபிறகு, அவர் உடனே டெலிபோனுக்குப் போய்ப் போலீஸாருடன் பேசி உண்மையைத் தெரிந்து கொண்டு வந்து என்னைப் பார்த்து, "ஐயா! நீர் சொன்ன படி அங்கஹீனம் நடந்திருப்பது உண்மைதான் என்று போலீசார் சொல்லுகிறார்கள். அங்கஹீனப்பட்டவர்கள் எல்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களாம். ஆனால், அவர்கள் வேலாயுதம் பிள்ளையும், அவரைச் சேர்ந்த மனிதரும் அல்லர். வேலாயுதம் பிள்ளையும் அவருடைய குடும்பத்தாரும் என் பங்களாவிலேயே வேறொரு விடுதியில் இப்போது க்ஷேமமாய் இருக்கிறார்கள். எனக்கு மாப்பிள்ளையாக வரிக்கப்பட்டிருந்தவரும், வேலாயுதம் பிள்ளையின் இரண்டாவது குமாரருமான கந்தசாமி என்பவர் போன சனிக்கிழமை முதல் காணப்படவில்லை. நாங்கள் எல்லோரும் அவரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அது ஒன்று தான் எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கும் விசேஷ சம்பவம். வேலாயுதம் பிள்ளை முதலியோர் இதோ க்ஷேமமாய் இருக்கிறார்கள். உமக்குச் சந்தேகமாய் இருந்தால், நீர் என்னோடு வாரும்; நான் காட்டுகிறேன்" என்றார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை ஆகையால், நான் அவரோடு நேரில் போய் பக்கத்து விடுதியில் இருந்த வேலாயுதம் பிள்ளையையும், அவரது குடும்பத்தாரையும் பார்த்தேன். அவர்கள் தங்களது புத்திரரைக் காணாமல் விசனப்பட்டவர்களாய் இருந்தார்கள் ஆனாலும், எவ்வித அங்கஹீனமும் இன்றி க்ஷேமமாய் இருக்கிறார்கள். அவரைச் சேர்ந்த பந்து மித்திரர்கள், நேற்று வெளியான செய்தியைக் கண்டு விசனக் கடலில் ஆழ்ந்து இருப்பார்கள். ஆதலால், நேற்று ஏற்பட்ட தவறை