பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

297

திருடன் என்பது நிச்சயமாவதால், அவனை ஜாமீனில் விட முடியாது என்று போலீசார் கண்டித்துச் சொல்லிவிட்டார்கள். இரண்டொரு நாளில் கேஸ் மாஜிஸ்டிரேட் கச்சேரியில் விசாரணைக்கு வருமாம். அதுவரையில் அந்த அம்மாள் இந்த ஊரில் இருக்க வேண்டுமாம். அதுவரையில் நாமும் இங்கே இருந்தே அந்த அம்மாளை அழைத்துக் கொண்டு போக வேண்டும், அந்த அம்மாளுக்கு நம்மேல் ஏற்பட்ட பிரியமும் மதிப்பும் கொஞ்சமும் குறையவில்லை. அவர்கள் நம்மேல் எள்ளளவும் சந்தேகமே கொள்ளவில்லை. ஆகையால், அவர்களைப்பற்றி நாம் கவலைப் பட வேண்டியதில்லை. ஆனால், மாசிலாமணிப்பிள்ளை நம்மை அனுப்பிய காரியம் மாத்திரம் இன்று நிறைவேறாது” என்றார். உடனே ரமாமணியம்மாள், “சரி, நாம் என்ன செய்யலாம். திடீரென்று இந்தச் சேர்வைகாரனுடைய புத்தி இப்படிக் கெட்டுப் போனதே அதற்குக் காரணம். மாசிலாமணி நம்மேல் கோபங் கொள்ள நியாயமே இல்லை. அது போகட்டும். இந்த அம்மாள் எங்கே காணோமே?” என்றாள்.

ரமாமணியின் தகப்பனார், “இந்த அம்மாள் இந்த ஊரிலும் திருவேட்டீச்சுவரன் பேட்டையிலும் உள்ள சிவாலயங்களுக்கெல்லாம் போய் சுவாமி தரிசனம் செய்து கொண்டு இராத்திரி வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இன்று இரவில் நாம் இங்கே இருக்கமாட்டோம் என்றும், அந்த அம்மாள் வந்து வழக்கப்படி இங்கே படுத்துக் கொண்டிருந்தால், நாம் விடியற்காலம் வருவோம் என்றும் சொல்லி வைத்திருக்கிறேன்” என்றார். ரமாமணியம்மாள், “சரி; அப்படியானால், நாம் எல்லோரும் இராத்திரி போஜனத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டு கோமளேசுவரன் பேட்டைக்குப் போய், வேலாயுதம் பிள்ளையின் ஜாகையண்டை இருப்போம். இடும்பன் சேர்வைகாரனுடைய ஆட்கள் வந்தால், அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு வந்து சேருவோம்” என்றாள். அதுவே சரியான யோசனை என்று தாய் தந்தையர் ஒப்புக் கொண்டனர்.

★ ★ ★