பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மாயா விநோதப் பரதேசி

மக்களும் இங்கிலிஷ் படித்து அதே துறையில் செல்ல வேண்டும் என்று நினைத்து அவர்களையும் கெடுக்க முயல்கிறார்களே! அந்தோ! என்ன கொடுமை இது! வெள்ளைக்காரர்கள் நம்மை ஆள்வதால், நமக்கு முக்கியமான சில விஷயங்களில் நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது உண்மை ஆனாலும்,அவர்களது சம்பந்தத்தாலும், அவர்களது பாஷையைக கற்பதாலும, ஏற்பட்டிருக்கும் தீமைகள் அநந்தமாகவும் விபரீதமாகவும் இருக்கின்றனவே! மனிதன் நற்குண நல்லொழுக்கங்களைக் கற்கவும், கடவுளின் பெருமை, குணாதிசயங்கள், உலக சிருஷ்டியின் அந்தரங்கள், மனிதனுக்கும் அவைகளுக்கும் உள்ள சம்பந்தம் முதலியவற்றைச் சரியானபடி உணர்ந்து தன்னுடைய தர்மத்தை ஒழுங்காக நடத்தவும், உலக விவகாரங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு தனது புத்தியை விசாலிக்கச் செய்து, அதை நல்லவழியில் சூட்சுமமாக உபயோகித்து உலகத் துன்பங்களை விலக்கி இன்பங்களைப் பெருக்கித் தன்னால் இயன்றவரையில் பிறருக்கு உபகாரம் செய்து சந்துஷ்டியாக இல்லறம் நடத்தவும் முக்கியமான சாதனமாக அமைந்ததே கல்வி என்ற அரிய பொருள். கல்வி என்பது அதைக் கற்பவனுக்கு நன்மை ஒன்றையே செய்யத் தக்கதாய் இருக்க வேண்டுமன்றி, தீமை செய்வதாய் இருப்பதே கூடாது. மனிதன் கல்வி கற்பதால், அவனுக்காவது, பிறருக்காவது தீமை உண்டாகுமானால், அப்படிப்பட்ட கல்வி மனிதனால் மதிக்கப்படுவதற்கே அருகமற்றது. அப்படிப்பட்ட கல்விக்காக மனிதன் தனது ஆயுசையும் பணத்தையும் செலவழிப்பதே சிறிதும் பொருந்தாத காரியம். இங்கிலிஷ்காரரால் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வியும், அவர்களுடைய புஸ்தகங்களில் காணப்படும் விஷயங்களும் லெளகீக விவகார ஞானங்களை மாத்திரம் பிரதானமாகப் போதிப் பவைகளாய் இருக்கின்றனவே அன்றி, கடவுள், மறுமை முதலியவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளே இல்லாத மனிதன் நல்ல யூகஸ்தனாகவும், புத்திசாலியாகவும், அதிக பணம் சம்பாதிக்கக் கூடியவனாகவும், வாக்கு வன்மையோடு பேசுகிறவனாகவும், அல்லது, திறமையாக எழுதுகிறவனாகவும், சாமர்த்தியமாக உலக விவகாரங்களை நடத்துகிறவனாகவும்