பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

43

ஆவதற்கு அனுகூலமாகவே அவர்களுடைய கல்வி அமைந்திருக்கிறது. மனிதர் வெளிப்பார்வைக்கு நாகரிகம் வாய்ந்தவன் போலத் தோன்றிப் பிறரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையே அந்த நூல்களைப் படிப்போர் தெரிந்து கொள்கிறார்களே அன்றி, மனிதர் திரிகரண சுத்தியாய்ப் பரிசுத்தமான நடத்தை உடையவராய் நடந்து கொள்ள வேண்டும் என்பதையாவது, இன்னும் மனிதர் ஒவ்வொரு நிலைமையிலும் இன்னின்ன தர்மங்களைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதையாவது அவர்களுடைய கல்வி குறிப்பாகவும் முதன்மையாகவும் போதிக்கிறதில்லை. அவர்களுடைய நற்குண நல்லொழுக்கம் வெளிப்பகட்டும், லெளகீக தந்திரமானதுமேயன்றி, உள்ளும் புறமும் ஒத்த தூய்மையை உள்ளடக்கியதல்ல. இப்படி அவர்களுடைய கல்வியும், கொள்கைகளும், நம்முடைய கல்விக்கும், கொள்கைகளுக்கும் மாறாக இருப்பதற்கு அவர்களுடைய வேதாந்த தத்துவமும், நம்முடைய வேதாந்த தத்துவமும் நேர்விரோதமாக இருப்பதே அடிப்படையான காரணம். இந்த உலகமும், இதன் செல்வமும், சுகங்களும் அநித்தியமானவை என்றும் நீடித்து நிற்கக்கூடியவை அல்ல என்றும், மனிதன் நிரந்தரமாக நாடக்கூடிய பேரின்பம் வேறே இடத்தில் இருக்கிறது என்றும் நாம் உறுதியாக எண்ணுகிறோம். இந்த உலகத்தில் நாம் நற்குண நல்லொழுக்கத்தோடு நடந்து, பஞ்சேந்திரியங்களின் மோகங்களை அடக்கி, ஆசாபாசங்களை எல்லாம் குறைத்து, இந்த உலக சிருஷ்டி முழுதும் கடவுளின் சாயல் என்றும், ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையது என்றும் நினைத்து, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து, தனது தாயைப் பிரிந்த ஒரு குழந்தை அவளை எப்போது அடைவோம் என்று கதறி அழுது எப்படி ஆவலே வடிவாக இருக்குமோ, அதுபோல நாம் கடவுளை எப்போது அடைவோம் என்ற ஆவல் தீயினால் தகிக்கப்பட்டு, நமது ஆசாபாசங்களை எல்லாம் கடவுளின் மீது திருப்பி ஒருமுகப்படுத்தி, அதே சிந்தனையாக இருக்க வேண்டும் என்பது நம்முடைய கொள்கை. அதற்கு அனுகூலமாக இம்மையில் நாம் திரிகரண சுத்தியாக சன்மார்க்கத்தில் நடந்து புண்ணியச் செய்கைகளைப் புரிய வேண்டும் என்பதும்