பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மாயா விநோதப் பரதேசி

தெரிந்து கொள்வானானால், தனியாக தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கும் என்னை இவன் கொலை செய்தாலும் செய்து விடுவான். ஆகையால் நான் இப்படியே இருந்து மனோன்மணியம்மாள் போலவே நடிக்கிறேன். நாளைய தினம் காலையில் கலியாணமும் முடிவு பெறட்டும். அதன் பிறகு மறுநாள் இரவில் இவன் சாந்தி கலியாணம் நடத்த உத்தேசிக்கிறானாம். அப்போது இவன் தனியாக இந்த அறைக்குள் வருவான் அதற்குள் நானும் யோசனை செய்து சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகிறேன்" என்று தீர்மானித்துக் கொண்டவனாய்க் கட்டிலின் மீது சயனித்துக் கொண்டிருந்தான்.

அன்றைய பொழுது யாதொரு விசேஷ சம்பவமும் இன்றிக் கழிந்தது. கந்தசாமி இருந்த இடத்திற்கு அடிக்கடி வேலைக்காரி வந்து அவனுக்குத் தேவையான போஜனம் முதலிய சௌகரியங்களை உதவி விட்டுப் போய்க் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் தன்னோடு கூட இருந்தால், தான் ஆண்பிள்ளை என்பதை அவள் ஒருகால் கண்டு கொள்வாள் என்ற அச்சம் கொண்ட கந்தசாமி ஏதோ முகாந்திரத்தைச் சொல்லி அவளை வெளியில் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

அவன் அவ்வாறிருக்க, மாசிலாமணியோ வேலைக்காரியோடு அடிக்கடி பேசி, உள்ளே நடந்த விருத்தாந்தங்களைத் தெரிந்து கொண்டே இருந்தான். மனோன்மணியம்மாள் மகா அற்புதமான அழகும் வசீகரமான முகதேஜஸும் உடையவளாய், மகாலக்ஷ்மியின் அவதாரம் போல இருப்பதாகவும், அந்தக் கலியாணத்திற்கு அவள் அதிக ஆட்சேபனை சொல்லி இடையூறு செய்யக் கூடியவளாகத் தோன்றவில்லை என்றும் வேலைக்காரி மாசிலாமணியிடம் தெரிவித்தாள். ஆதலால், அந்த யௌவனப் புருஷன் கட்டிலடங்கா மனவெழுச்சியும் மோகாவேசமும் கொண்டு, அத்தகைய இன்பவடிவான பெண்மணியைத் தான் எப்போது அடைவோம் என்று ஆவலாகிய பெருத்த அக்கினியால் தகிக்கப்பட்டவனாய் ஊணுறக்கம் இன்றி அதே சிந்தனையாக இருந்து சதாகாலமும் வேதனை அடைந்தவனாய்த்