பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மாயா விநோதப் பரதேசி

ரகசியத்தைப் பற்றி, எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக கலெக்டருடைய பெண் ஒரு பிரத்யேகமான இடத்தில் சயனித்து இருந்தமையால், யாதொரு துன்பமும் இன்றி அவள் தப்பினாள். இரவில் நடந்த சம்பவம் பொழுது விடிந்த பிறகுதான் அவளுக்குத் தெரியுமாம். காலையில் அவள் எழுந்து போய்த்தான் போலீசாரைத் தருவித்தாளாம், போலீசார் நிரம்பவும் பாடுபட்டுத் துப்பு விசாரித்து வருகிறார்கள்.

என்று எழுதப்பட்டிருந்த செய்தியைப் படித்த மாசிலாமணி திடுக்கிட்டு திக்பிரமை கொண்டவனாய், "என்ன ஆச்சரியம்! இங்கே வந்திருக்கும் பெண் கலெக்டருடைய மகள் அல்லவாமே! அப்படியானால் இவள் யார் என்பது தெரியவில்லையே! இவர்கள் சொன்னபடி இவள் வேலாயுதம் பிள்ளையின் மைத்துனியும் அல்லவாம். பிறகு இவர்கள் யார் என்பதும், என்ன கருத்தோடு இவர்கள் மனோன்மணியிடம் போனார்கள் என்பதும் தெரியவில்லையே!" என்றான்.

8-வது அதிகாரம்
சதிகாரனுக்கேற்ற கொலைகாரி

"ஆம், எஜமானே! இது கள்ளனைக் குள்ளன் பாய்ந்த கதை போல இருக்கிறதேயொழிய வேறல்ல. மனோன்மணியம்மாளை நாம் அபகரித்துவர நினைத்துப் போக, நமக்கு முன் யாரோ போய் அவளுக்கு ஏதோ கெடுதல் செய்ய நினைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறதே! நானும் அத்தனை ஆள்களும் பட்டணம் போய் எவ்வளவோ பாடுபட்டதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே!" என்று வியப்போடும் கவலையோடும் மறுமொழி கூறினான் இடும்பன் சேர்வைகாரன்.

அதைக் கேட்ட மாசிலாமணி, "நாம் கொண்டு வந்திருக்கும் இந்தப் பெண்ணும், அடிபட்டுப் பட்டணம் ஆஸ்பத்திரியில் கிடக்கும் அந்த மனிதனும் மனோன்மணியையும் அவளுடைய