பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மாயா விநோதப் பரதேசி அளவற்ற ஆனந்தமும் பூரிப்பும் தோன்றி அவனை மெய்ம் மறக்கச் செய்தன. அவன் நிரம்பவும் துடியாக எழுந்து வெளியில் வர ஆரம்பித்தான். உடனே ஜெவான்கள் அவனது கைகளைச் சேர்த்து விலங்கிட்டு அவனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றனர். சென்றவர் பல தெருக்களின் வழியாக இடும்பன் சேர்வைகாரனை நடத்தி அழைத்துக் கொண்டு சுமார் முக்கால் மைல் துரத்திற்கு அப்பால் இருந்த போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சென்றனர். இடும்பன் சேர்வைகாரன் போலீஸ் இலாகாவில் (ஹெட்கான்ஸ்டேபில்) வேலையில் இருந்து விலக்கப்பட்டவன் என்பது முன்னரே கூறப்பட்ட விஷயம். அவன் எவ்வித இழிவிற்கும் கூசாத மற்ற முரட்டுத் திருடர்களைப் போல் அல்லாமல் தன்னை கண்ணியமான மனிதன் என்றே பாவித்திருந் தவனாதலால், கைவிலங்கோடு தெருத்தெருவாய் ஊர்வலம் போனது, அவனால் சகிக்க முடியாத மரண வேதனை போல இருந்தது. வழியில் போன ஜனங்கள் தன்னை உற்று உற்றுப் பார்த்தது அவனது இருதயத்தில் கூர்மையான ஈட்டிகளால் குத்துவது போல இருந்தது. தான் எப்பாடுபட்டாயினும் அந்த மானக்கேடான நிலைமையில் இருந்து தப்பித்து ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டவனாய்த் தனது முகத்தை அப்புறம் இப்புறம் திருப்பாமலும், அன்னிய மனிதரைப் பாராமலும், கீழே குனிந்தபடி அவன் நடந்து போலீஸ் ஸ்டேஷனை அடைந்தான். அந்த ஸ்டேஷனில் ஓர் அறைக்குள் சப் இன்ஸ்பெக்டர் தனியாக உட்கார்ந்திருந்தார். ஜெவான்கள் இருவரும் இடும்பன் சேர்வைகாரனை அந்த அறைக்குள் அனுப்பி விட்டு வெளியிலேயே நின்றனர். இடும்பன் சேர்வைகாரன் நிமிர்ந்து பார்த்து, அதற்கு முன் சாயப்புவிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டரே அவ்விடத்தில் இருப்பவர் என்பதைக் கண்டு கொண்டான். உடனே அவனது மனத்தில் ஒருவிதத் துணிவும் மகிழ்ச்சியும் உண்டாயின. ஆயினும், அவர் தனக்கு எவ்விதமான செய்தி கூறப்போகிறாரோ என்ற கவலையும் சஞ்சலமும் ஒரு புறத்தில் ஓயாமல் பெருகி வதைத்துக் கொண்டே இருந்தன. அவன் சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, "சுவாமிகளே! நமஸ்காரம்" எனறான.