பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மாயா விநோதப் பரதேசி உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் அவர் அன்றைய பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார் ஆதலால், அவர் அன்றைய தினம் மனோன்மணியம்மாளைக் கவனிக்க இயலாமல் போய் விட்டது. காலையில் கட்டிலில் படுத்த மனோன்மணியம்மாள் மாலை வரையில் பேச்சு மூச்சின்றி ஒரே நிலையாகப் படுத்திருந்ததைக் கண்ட வேலைக்காரி நிரம்பவும் திகில் கொண்டு நடுநடுங்கி மனோன்மணியம்மாளைத் தட்டி எழுப்பி, "அம்மா என்ன விபரீதம் இது? இப்போது அந்திவேளை நெருங்கி விட்டது. காலை முதல் ஜலம்கூட சாப்பிடாமல் நீ இப்படிப் படுத்திருப்பதைக் கான என்னால் சகிக்கவே முடியவில்லை. நேற்றுகூட நீ பட்டினியாய் இருந்தாய். அப்படி இருக்க, வயிறு மந்தமாய் இருக்கிறதென்று சொல்வதற்கும் இடமில்லை. இப்போதாவது எழுந்து கொஞ்சம் சாப்பிடம்மா" என்று நிரம்பவும் கெஞ்சி மன்றாடி வேண்டிக் கொண்டாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் நிரம்பவும் வேதனைப்பட்டவளாய், "அடி ஏனடி சாப்பாடு சாப்பாடு என்று இப்படி ஓயாமல் என்னைக் கொன்று கொண்டே இருக்கிறாய்; நீ பேசாமல் இருந்தால், அதுவே பசிதாகம் எல்லாம் தீர்ந்த மாதிரி இருக்கும்" என்றாள். அதைக் கேட்ட வேலைக்காரி அவ்வளவோடு பேசாதிராமல் அவ்விடத்தை விட்டு சமையலறைக்குப் போய் ஏதோ சில ஆகாரம், பால், தண்ணிர் முதலியவற்றை எடுத்து வந்து கட்டிலண்டை வைத்துவிட்டு அவளுக்கெதிரில் போய் உட்கார்ந்து கொண்டு அவளை மிகுந்த வாஞ்சையோடு தடவிக் கொடுத்து, "அம்மா! நீ இப்படி சுத்தமாய்ப் பட்டினி கிடப்பதனாலேயே மேன் மேலும் களைப்பும் சோம்பலும் அதிகரித்து, ஆகாரம் சாப்பிடவும் பலமில்லாமல் செய்திருக்கின்றன. நான் சாதத்தைப் பிசைந்து வாயில் ஊட்டுகிறேன். சாப்பிடம்மா! நீ இப்போது கொஞ்சமாவது சாப்பிடாவிடில் நான் அப்பாவிடம் போய் இதைச் சொல்லத் தான் வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்வார்கள்" என்று கூறியபின் ஆகாரத்தை எடுத்து வாயில் ஊட்டத் தொடங்கினாள். அவள் செய்தது மனோன்மணி யம்மாளுக்குச் சகிக்க ஒண்ணாத மரண வேதனையாக இருந்தது