பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 உடனே சர்க்கார் வக்கீல் எழுந்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்குச் சைகை காட்ட அவர் ஆயத்தமாக வைத்திருந்த ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய், சாட்சிக் கூண்டில் நின்று கொண்டிருந்த ஜானிஜான் கான் சாயப்புவிடம் கொடுத்து, தாங்கள் எல்லோரும் அவருக்கு மிகுந்த நன்றி செலுத்துவதாய்க் கூறிய பின், மாசிலாமணியை அழைத்து அவன் வைத்திருந்த பதினாயிரம் ரூபாயையும் உபசார வார்த்தைகளோடு அவரிடம் கொடுக்கும்படி ஏவினார். மாசிலாமணியின் அப்போதைய மனநிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டுமன்றி அதை விவரித்துக் கூறுவது சாத்தியமற்ற காரியம் என்றே கூற வேண்டும். தான் செய்த தந்திரங்கள் எல்லாம் வீணாகும்படி செய்து, தனது அண்ணன் அந்தமான் தீவிற்குப் போகும்படி செய்தவரான ஜானி ஜான் கான் சாயப்புவுக்கு, அவர் செய்தது நல்ல காரியம் என்ற உபசார வார்த்தையோடு தானே பதினாயிரம் ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்து மாசிலாமணிக்கு உண்மையில் அவமானமும், விசனமும், அழுகையும், சகிக்க ஒண்ணாத மனவேதனையும் உண்டாயின. ஆனாலும், அவைகளை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல், வற்புறுத்தி தனது முகத்தில் புன்னகையை உண்டாக்கிக் கொண்டு ஜானிஜான் கான் சாயப்புக் கெதிரில் போய், "ஐயா! நான் கொடுப்ப தாக ஒப்புக் கொண்ட பதினாயிரம் ரூபாய் இதோ இருக்கிறது. நீங்கள் செய்த காரியத்தைப் பற்றி நானும் உங்களை நிரம்பவும் பாராட்டுகிறேன்" என்று கூறிப் பணத்தைக் கொடுத்து சலாம் வைத்தான். அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்ட சாயப்பு, "ஐயா! உங்கள் அண்ணனை நான் பிடித்துக் கொடுத்ததைப் பற்றி நீர் இவ்வளவு தூரம் சந்தோஷப்படுவது உம்முடைய மேலான மனப்போக்கைக் காட்டுகிறது. அவர் சிறையில் இருந்து ஓடி வந்த விஷயத்தில் நீர் சம்பந்தப்படவில்லை என்பதையும் நீர் இதன் மூலமாய் வெளியிடுகிறீர். அது போலவே காரியத்திலும் நீர் சம்பந்தப்படாமல் இருந்தால் உம்மைப் போல உத்தம சிகாமணி யாரும் இருக்க மாட்டார்கள். எந்தக் காரியமும் வெளிப்படைக்கு மாத்திரம் செய்தால் அது எப்படியும் காலக்கிரமத்தில் தெரிந்து போவது நிச்சயம். இன்னும் பாக்கியிருக்கும் விசாரணையில் நீர்