பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. - மாயா விநோதப் பரதேசி சம்பந்தப்படாமல் இருக்கிறீரா என்பதைப் பார்க்கலாம்" என்று மறுமொழி கூறினார். அதற்கு மாசிலாமணி எவ்வித மறுமொழியும் கொடாமல், அப்பால் சென்றான். அவன் சாயப்புவுக்குச் சன்மானம் கொடுத்த சமயத்தில், கமாலுதீன் சாயப்பு கீழே குனிந்தபடி பூமாதேவியை நோக்கிய வண்ணம் கண்ணிர் விடுத்தவராய் வெட்கிக் குன்றிபோய் நின்றார். அடுத்த நிமிஷம் போலீஸ் ஜெவான்களுள் இருவர் மற்ற இரண்டு கைதிகளையும் அவ்விடத்தி லேயே விட்டு, கமாலுதீன் சாயப்புவை மாத்திரம் அழைத்துக் கொண்டு போய்விட்டனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட சாயப்பு வும் சாட்சிக் கூண்டை விட்டு வெளியில் சென்றார். அதன் பிறகு அந்த வழக்கில் மிகுதி இருந்த இரண்டு பாகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சட்டைநாத பிள்ளையை அழைத்து வந்து ஜெயில் வார்டர்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அவரை விடுவித்து அபகரித்துக் கொண்டு போன குற்றத்தைச் செய்ததாக ரமாமணியம்மாளும், இடும்பன் சேர்வைகாரனுடைய ஆள்கள் பத்து மனிதரும் கொணர்ந்து நிறுத்தப்பட்டனர். மூக்கு அறுபட்டுப் பரம விகாரமாக வந்து நின்ற ரமாமணியம்மாளைக் காண, எல்லோரும் கைகொட்டி நகைத்து ஏளனம் செய்து பலவாறு துவித்தனர். ஜெயில் வார்டர்கள் இருவரும் சாட்சியாக வந்து, அந்தப் பெண்பிள்ளையே தம்மை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு போனவள் என்றும், அந்த ஆட்களே தம்மைக் கட்டிப் போட்டுவிட்டு சட்டைநாத பிள்ளையை பலவந்தமாக விடுவித்துக் கொண்டு போனவர்கள் என்றும் உறுதியாகக் கூறினர். அதற்கு அனுசரணையாக, அந்த ஆட்கள் தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தன்றி, ஜட்ஜ் துரை அவர்கள் தங்கள் விஷயத்தில் காருண்யம் காட்டி சொற்பமாகத் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ரமாமணியம்மாள் தங்களோடு வந்தது உண்மைதான் என்றும், தாங்கள் மாசிலாமணிப் பிள்ளை, இடும்பன் சேர்வைகாரன் ஆகிய இருவரது வேண்டுகோளின்படி அவ்வாறு செய்ததாகவும் கூறினர். ரமாமணியம்மாள் மாத்திரம், தான் அந்தக் குற்றத்தைச் செய்யவே இல்லை என்று கூறி மறுத்தாள். பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை