பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 271 என்பார்களே, அது போல இருக்கிறதே நீ சொல்வது. நான் நேற்று வரையில் ஒரு பட்டிக்காட்டில் இருந்தேன். டைப் அடிக்கும் யந்திரத்தை நான் கண்ணால் பார்த்து மாதக் கணக்கில் ஆகிறதே! நான் டைப் அடிக்கவும் இல்லை, படமும் அனுப்பவில்லை. வேறே யாரோ அதை அனுப்பி இருக்கிறார்கள்" என்றான். கோபாலசாமி, "நீ உன் சம்சாரத்துக்கு அதை அனுப்பி அதைப் பற்றி நாங்கள் புரளி பண்ணுவோம் என்று நினைத்து நீ உண்மையை மறைக்கிறாய் போலிருக்கிறது" என்றான். கந்தசாமி உறுதியாகப் பேசத் தொடங்கி, "இல்லையப்பா! உன்னிட்ம் நான் பொய் சொல்லுவேனா! நான் அதை அனுப்பவே இல்லை. வேறே யாரோ அனுப்பி இருக்கிறார்கள். அந்தப் பெண் என்னை நினைத்து நோய் கொண்டிருப்பதாக நீ சொன்னாய் அல்லவா. ஒரு வேளை அவளுடைய தகப்பனாரே, அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் தேறுதலாக இருக்கும் என்று நான் அனுப்பியது போல, அதைத் தபாலில் அனுப்பி இருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றான். கோபாலசாமி, "அடேய் என்னடா இது நீ சொல்வது கேழ்வரகில் நெய் ஒழுகுகிறதென்பது போல் அல்லவா இருக்கிறது, வேறே யாராவது அனுப்பியதாகச் சொல்ல, உன் பெண் வேஷப்படம் மற்றவருக்கு எப்படிக் கிடைத்தது? பட்டாபி ராம பிள்ளை அனுப்பப் போவது, ஆவேசங் கொண்ட பெண் பிள்ளைக்கு எப்படித் தெரிந்தது? அன்றைய தினம் வேஷம் போட்டுக் கொண்டவுடன் நாம் நேரில் இங்கே வந்தோம். அன்று நீ இந்த வீட்டில் நடு இரவு வரையில் இருந்தாய். அது வரையில் யாரும் உன்னை வைத்துப் படம் பிடிக்கவில்லை. அதன் பிறகு நீ கும்பகோணம் போய் அவ்விடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 12-மணி வரையில் இருந்தாய். அது வரையில் அங்கேயும் யாரும் படம் பிடித்ததாக நீ சொன்ன வரலாற்றில் தெரியவில்லை. பிறகு நீ குதிரை வண்டியில் ஆலங்குடிக்குப் போனவுடன் உன் பெண் வேஷத்தைக் கலைத்து விட்டதாகச் சொல்லுகிறாய். அப்படி இருக்க, இந்தப் படம் எங்கிருந்து வந்தது? அதே புடவை, அதே ரவிக்கை, அதே நகைகள், அதே அலங்காரம் எல்லாம் அப்படியே இருக்கிறதே!" என்றான்.