பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மாயா விநோதப் பரதேசி "கண்ணப்பா கண்ணப்பா வந்துவிட்டான் கந்தசாமி! இதோ வந்து விட்டான்! சுவாமியின் வாக்கு பலித்துவிட்டது! கவலைப் படாதீர்கள்" என்று பெருத்த கூக்குரல் செய்த வண்ணம் கோபால சாமி அலங்கோலமாய் ஓடிவந்து அந்தக் கும்பலில் நுழைந்தான். அதைக் கேட்ட எல்லோரது உடம்பும் திடீரென்று தூக்கிப் போட்டது. எல்லோரும் ஏககாலத்தில், "ஹா வந்து விட்டானா! எங்கே அவன்?" என்று கூறி அப்படியே வியப்பே வடிவாய் மாறிப் பதறித் துடிதுடித்துப் பேரின்ப நிலையை எட்டிப்பிடிக்கத் தாவுகிறவர்கள் போல கோபாலசாமி வந்தவுடன் அவனுக்குப் பின்னால், தயங்கித் தயங்கி மிகுந்த கிலேசத்துடன் வந்து தலையை நீட்டிய கந்தசாமியைக் காணவே, கன்றைப் பிரிந்து கண்ட தாய்ப் பசு போல திரிபுரசுந்தரியம்மாள் மற்ற புருஷர்கள் நிற்கிறார்கள் என்பதையும் மறந்து ஒடோடியும் சென்று, "அப்பா தம்பி கந்தசாமி வந்தாயா! உன்னை உயிரோடு காணப்போகிறோமா என்று நாங்கள் எல்லோரும் ஏங்கிப் போய் உன்னை நினைத்து உயிரை விட்டுக் கொண்டிருந்தோமப்பா! நல்ல வேளையாக வந்து சேர்ந்து எங்கள் வயிற்றிலெல்லாம் பாலை வார்த்தாய்' என்று மிகுந்த வாஞ்சையோடு கூறிய வண்ணம் கந்தசாமியின் கைகளை ஆசையோடு பிடித்து அவனது முதுகையும் கன்னங்களையும் பிரியமாகத் தடவிக் கொடுத்து, ஆனந்த பாஷ்டத்தை ஆறாய்ப் பெருக விட்டாள். அதே சமயம் கண்ணப்பாவும் ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து, "தம்பி கந்தசாமி! வந்தாயா? ஆகா! எங்களை எல்லாம் தவிக்க விட்டு, இத்தனை நாள் மாயமாய் மறைந்து போய்விட்டாயே அப்பா" என்று வாஞ்சையோடு அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான். வேலாயுதம் பிள்ளையின் கையில் இருந்த கற்பூர ஆரத்தித் தட்டும், அவரது பசியும், களையும், இளைப்பும் போன இடம் தெரியாமல் மறைந்து போயின. அவரும் தமது வாத்சல்யப் பெருக்கில் தம்மை மறந்து தமது குமாரனைக் கட்டிப்பிடிக்க ஆவல் கொண்டு இரண்டோரடி எடுத்து வைத்தார். ஆயினும், மற்றவர் அவனைச் சுற்றி நின்றதால் தமக்கு இடம் கிடைக்காதென்று நினைத்து துரத்தில் நின்றபடி கந்தசாமியைத் தலை முதல் கால் வரையில் இரண்டு மூன்று தரம் ஏற இறங்கப் பார்த்துத் தமது ஆசை வெள்ளத்தினால் அவனை அபிஷேகம் செய்வித்து, "கடவுள்