பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

மார்க்சீய அழகியல் கொள்கை, மார்க்சீய அறிவியல் தோற்றக் கொள்கையின் (Marxist epistemology) அடிப்படையில் எழுந்தது. அதற்கு விஞ்ஞான ரீதியான அடிப்படைகளை அமைத்தவர்கள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மூவரும் ஆவர். இவ்வடிப்படைகள் 'பிரதிபலிப்புக் கொள்கை' என்று வழங்கப் பெறும். லெனின் எழுதினார்:

அறிதலின் முதல் கட்டம், எல்லை வகுத்தலும் அகவயமாதலும் ஆகும். இது அகத்தில் புற உலகைக் காணும் செயல். தனி மனித அறிவுத் தோற்றத்தில், அது எல்லைக்குட்பட்டும் அகவயமாகவும் இருக்கிறது. அகவய நோக்கங்களை அது நிறைவு செய்கிறது. புற உலகை அறிதல் என்பது மனித உள்ளத்தின் மூலமும் மனித உள்ளத்திலும் நிகழ்கிறது.

புற உலகில் பொருள் உள்ளது. இப்பொருளை அதன் தன்மைகள், செயல்கள் முதலியனவற்றோடு ஒரு கருத்தாக உள்ளத்தில் படைத்துக் காண்பது அறிதல் என்ற செயலாகும்.

இந்த வரையறையைப் புரிந்துகொள்வதில் ஓர் ஆபத்து ஏற்படக் கூடும். அகவயமான அம்சத்தை முழுமைப்படுத்தி, அகவயப் பிரதிபலிப்பே புற உலகின் சாரம் என்று கருதிவிடக் கூடும். இதனால் பொருளையும் அதனை அறிதலையும் வேறு வேறாகப் பிரித்துக் காண்கிற போக்குத் தலைகாட்டலாம். எல்லைக்குட்படுதலும் (Limited), தற்காலிகமானதும் (Transitional), தராதரத் தன்மையுடையதும் (Relative) ஆன மனித அறிதல் செயலை முழுவதும் அகவயமானது என்று கான்ட் என்ற தத்துவ ஞானி கருதினார். இதனால் அறிதல் செயலையும் அறியப்படும் பொருளையும் தனித்தனியாக அவர் பிரித்தார். இதனால் அகவயமான படிமமே புறவயமான பொருள் என்ற தவறான முடிவுக்கு கான்ட் வந்தார். லெனின் இதனைத் தவறான முடிவு எனச் சுட்டிக் காட்டினார்.

பொருளேதான் சுதந்தரமானது, உண்மையானது. ஒரு மாங்காய் புறவய உண்மை. அது பற்றிய நமது மனப் படிமம் மாங்காயின் பிரதிபலிப்புத்தான். மாங்காய் இல்லாவிட்டால் மாங்காய் பற்றிய கருத்தும் இல்லை. இது ஒரு நிழல் போன்றது. நிழலை உண்டாக்கும் பொருள்தான் புறவய உண்மை.