பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நா.வானமாமலை

நிழல், பொருள் இருந்தால்தான் உண்டாகும். பொருள் இல்லையேல் நிழலும் இல்லை.

கலைத்துறையில் 'அகவயம்' (Subjective), புறவயம் (Objective) என்ற கருத்தமைப்புகளின் பொருளையும் முக்கியத்துவத்தையும் இங்கு ஆராய்வோம்.

கலை, மனித உணர்வின் ஒரு வடிவம். அக உலகிற்கு வெளியே உள்ள யதார்த்தமான உலகை அது பிரதிபலிக்கிறது. மார்க்சிய அறிதல் முறைக் கொள்கையின் அடிப்படையில் அறியப்படும் பொருளும் அதன் அகப் பிரதிபலிப்பும் வரலாற்றிற்கும் உற்பத்தி நிலைக்கும் கட்டுப்பட்டவை. ஆனால் கலை, இக் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறவும் செய்யலாம். இம் மீறுதலையே இலட்சியம் (ideal), குறிக்கோள் என்று சொல்லுகிறோம். எடுத்துக்காட்டாகக் கம்பன் தனது பாத்திரங்களைப் படைக்கும்போது புற உலகின் அகப்பிரதிபலிப்பை மட்டும் படைக்கவில்லை. புற உலகில் இராவணனும் கும்பகர்ணனும் இருந்ததில்லை. உருவத்தில், ஆகிருதியில் இவர்கள் இயற்கைக்கு அதீதமானவர்கள். ஆனால் உள்ளத்தில் மனித இயல்புகள் கொண்டவர்கள். நாம் நல்ல பண்புகள் என்று கருதுவனவும் தீயபண்புகள் என்று கருதுவனவும் இப்பாத்திரங்களில் உண்டு.

இராவணன், கும்பக்ர்ணன் முதலிய பாத்திரங்களையும், கதாநாயகனான இராமனையும் கலைப்படைப்புக்களாக உருவாக்கியபோது, பாத்திர வகைகளாகவும் இலட்சிய மாதிரிகளாகவும் படைத்துள்ளான். மேலும் தான் அறிந்த சோழ நாட்டின் பிரதிபலிப்பில் இருந்து கோசல நாட்டைக் கலையால் படைக்கும்பொழுது, சோழ நாட்டின் சமூக வாழ்க்கையை மீறி அதனை ஒரு கம்யூனிச உடோபியாவாக, பல நூற்றாண்டுகளிலும் தமிழரது ஆர்வங்களை ஆகர்ஷித்துக்கொண்டு ஒளிமிக்க ஒரு வருங்காலத்தைக் குறிக்கோளாக உருவாக்கினான். இதுபோன்றே வள்ளுவனும் நாடு, நகரம், மனிதன், அரசு இவை பற்றிக் கூறும்பொழுது யதார்த்தத்தையும், யதார்த்தத்தின் வளர்ச்சியான குறிக்கோள் நிலைகளையும் சித்திரிக்கிறான். எந்தச் சிறந்த கலைப்படைப்பிலும் யதார்த்தம், வரலாற்றிற்கும் உற்பத்தி நிலைக்கும் கட்டுப்பட்டிருப்பினும், மனிதனது கற்பனையும் மனித சக்தியும் கலையுணர்வு என்ற வளர்ச்சியும் அவனை அத்தளைகளில் இருந்து விடுவித்து, சமூக இயக்க விதிகளுக்குட்பட்டே குறிக்கோள் உலகில் உலவ விடுகின்றன.

கலைஞனும் கவிஞனும், பொருளின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும்பொழுது, அதன் தற்கால நிலையினின்று அது