பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

15

வளர்ச்சியடைகிற போக்கையும், வளர்ச்சியடைந்த நிலையில் அதன் தன்மையையும் குறிக்கோள் அல்லது இலட்சிய உலகில் காட்டுகிறார்கள். இங்குதான் புறவயமான பொருளின் அகவயமான பிரதிபலிப்பு மீண்டும் அகவயமான கலையுணர்வினாலும் கற்பனையாலும் கலைப்படைப்பாக மாறுதல் பெறுகிறது.

இங்கு உண்மையான பொருளுக்கும், அதன் கலைப் படைப்புக்கும் உள்ள வேறுபாட்டை மனத்தில் கொள்ள வேண்டும். உலகில் பொருள், வரலாற்றில் ஸ்தூலமான ஒரு வஸ்து, நிகழ்ச்சி, ஒரு வீரனின் இயல்புத்தொகை இவற்றுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். இவை கலைப்படைப்பாக, அகவுலகப் பிரதிபலிப்பாக உருவாகிக் கவிதையிலும் சிற்பத்திலும் ஓவியத்திலும் கலைப்பொருளாகவும் காவியத்தில், காவியப் படைப்பாகவும் உருப்பெறுகின்றன. ஒரு காவிய வீரன் புற உலகில் உள்ள எந்த ஒரு வீரனும் அன்று. ஆனால் உண்மையான புற உலக வீரத்தின் கலைப்பிரதிபலிப்பே அவன். இப்படிமத்தில் காலம், வரலாறு ஆகியவற்றின் முத்திரைகள் உள்ளன. இது புறஉலக உண்மையில் இருந்து மனித மன உள்ளடக்கத்தின் தாக்கத்தால் பெரிதும் மாற்றப்படுகிறது.

இப்படி மாறுகிறபொழுது, அது எப்பொருளின், நிகழ்ச்சியின், தன்மைகளின் பிரதிபலிப்போ, அவற்றிலிருந்து பெரிதும் மாற்றமடைகிறது. ஒரு கலைப்படைப்பு, மனிதக் கற்பனையால், காலம், தளம் இவற்றில் பெரிதும் உருமாறிக் காணப்படும். உண்மையான புறவய யதார்த்தம், அகவயமாகப் பிரதிபலிக்கப்படும்பொழுது, புதிதாகப் படைக்கப்படுகிறது. கலை, உள்ளத்தைப் பிரதிபலிப்பது மட்டுமன்று.

ஒரு புறவயமான இயற்கைக் காட்சி, கலைப்படைப்பின் முதல் கட்டத்தில், உள்ளத்தால் அகவயமாகப் பிரதிபலிக்கிறது. இதைக் கலையுள்ளம் படிமமாகப் படைக்கிறது. இது மட்டும் கலையன்று. கலைஞன் உள்ளத்தில் தோன்றுகிற மலை, கடல், காடு இவற்றின் படிமங்கள் மட்டும் கலையன்று. இப்படிமங்கள், கோடு, வண்ணம், சொல் மூலம் மனித இனத்துக்கு, புலன்கள் மூலம் உணரக்கூடிய ஓவியம், சிற்பம், கவிதை முதலிய புற வடிவங்களைப் பெறவேண்டும்.

புறவயமான, புலனுணர்வால் அறியப்படக்கூடிய, மனத்தில் தோன்றிய கலைப்படிமங்களின் புறவெளியீடே கலைப் படைப்பு கலைஞன் உலகில் காணப்படாத புதிய கலைப் படைப்புகளைப் படைக்கிறான். கலைப்படிமங்கள், இயற்கையில் இருந்தோ, பழமையான கலைப்படைப்புகளில் இருந்தோ