பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நா.வானமாமலை

கிடைக்கலாம். பழமையான கலைப்படைப்பு காலத்தின் சித்தனைக்கேற்ப மாற்றப்படலாம்.

இதை விளக்கச் சில உதாரணங்கள் தருவேன். பாரதியின் கண்ணன் என்னும் கலைப்படிமத்தை எடுத்துக் கொள்ளுவோம். ஆழ்வார்களும் ஆண்டாளும், கண்ணனை ஒரு கலைப் படைப்பாக, உள்ளம் கொள்ளை கொள்பவனாகப் படைத்தளித்துள்ளார்கள். பாரதி இப்படிமத்தை மாற்றிப் புதிய பண்புகளுடைய வேறொரு படிமத்தை அமைக்கவிரும்புகிறான். மரபு வழிப்பட்ட கண்ணன் படிமம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறுதல் அடைகிறது. குழந்தையாகவும் காதலானாகவும், பெரியாழ்வாராலும் ஆண்டாளாலும் படைக்கப்பட்ட கண்ணன், தந்தை, குரு, சேவகன், தாய், காதலி ஆகிய பாத்திரங்களில் பாரதியால் படைக்கப்பட்டுள்ளான். கண்ணன் படிமம், பாரதியின் காலவழிப்பட்ட சிந்தனையின் பரப்பாலும் ஆழத்தாலும் தாக்கம் பெற்று மாற்றம் அடைந்துள்ளது.

'தாய்' என்ற கலைப்படிமம் கார்க்கிக்கு முன்பு, பல கவிஞர்கள் படைத்து அளித்ததுதான். சங்க கால வீரயுகத்தில் நாம் தாயைச் சந்திக்கிறோம். அதே விதமான, சற்றே மாறிய தாயை ஆழ்வார்களது படைப்புகளில் பார்க்கிறோம். ஆரம்ப கால நாவல்களில் தாயைக் காண்கிறோம். மாக்சிம் கார்க்கியின் 'தாய்' என்னும் நாவலில் முன்னெதிலும் நாம் காணாத தாயின் படிமத்தை எழுத்தாளன் தரிசிக்கச் செய்கிறான். புரட்சி யுகத்தில், புதிதாகத் தோன்றுகிற தாய் இவள். மரபு வழிப்பட்ட தாயின் இயல்புகளோடுதான் இவள் பிறக்கிறாள். தாயின் கவலைகள், மக்கள் நல்வாழ்க்கையின் ஆர்வம், மக்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம், சமுதாய நிலைமை பற்றிய அறியாமை இவை யாவும் அவள் மரபு வழிப்பட்ட தாயின் படிமத்தில் இருந்து பெற்றவைதான். புரட்சியுகம் புதிய மனித வார்ப்புகளைப் படைக்கிறது. இவளது மகனும் அவனது தோழர்களும் இப்புதிய வார்ப்புகள். இப்புதிய மனிதர்கள் ஒரு புதிய பெரிய செயலைச் செய்வதற்காக, சமூகப் புரட்சியை நிறைவேற்றுவதற்காகச் சமூக வாழ்க்கையில் உருவாக்கப்பட்டவர்கள். இவர்கள் மீது கொண்ட அன்பினாலும் கவலையாலும், இவர்களது சிந்தனைகளை அறிந்து, அவற்றின் நியாயத் தன்மையை உணர்ந்து தாய், மக்களது குறிக்கோள்களோடு ஒன்றிவிடுகிறாள். இங்கே மாக்சிம் கார்க்கி ஒரு புதிய, ஆக மாறுதலால் மாற்றமடைந்த ஒரு புரட்சித் தாயைப் படைக்கிறான்.

அகலிகை, மூவாயிரம் ஆண்டுகளாகப் புதிதுபுதிதாகப் பன்டக்கப்பட்டிருக்கிறாள். இக்கலைப் படைப்புக்கள் அனைத்-