பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

17

தும் ஒன்றாக இல்லை. மூவாயிரம் ஆண்டுகளாக, ஆண், பெண் திருமண உறவுகளின் உரிமை வேறுபாடுகளைப் பிரதிபலிக்கின்ற கலைப்படிமங்களாக, அவ்வக்காலங்களின் சமூகச் சிந்தனைகளின் சுமைகளைத் தாங்கிக்கொண்டு, மாற்றமடைந்து அகலிகை பல்வேறு பிறப்புகள் எடுத்திருக்கிறாள். இதைப் பல்வேறு இலக்கிய ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளார்கள். அவற்றுள் நான் சிறந்தது எனக் கருதுவது கைலாசபதியின் ஆராய்ச்சியையே. 'கற்பு' பற்றிய கருத்து மாற்றங்கள், சிந்தனைப் போராட்டங்கள், அகலிகையின் இயல்பமைப்பைப் பெரிதும் மாற்றமடையச் செய்துள்ளன. எனவே பழைய மரபில் வார்க்கப்பட்டுள்ள படிமங்கள், பிற்காலக் கவிஞர்களது சிந்தனை மாற்றங்களால் மாற்றப்படலாம்.

'சிந்தா விஷ்டயாய சீதா' என்றொரு கலைப்படைப்பில் குமரன் ஆசான் (மலையாளம்) இந்திய இலக்கிய மரபில் மிகப் பெரிய, சிறந்த காப்பியமான இராமாயணத்தின் கதாநாயகியையே, மரபுவழிப்பட்ட படிமங்களில், சிந்திக்காத முறையில் சிந்திக்கவைத்து, 'சிந்தனையில் ஆழ்ந்துபோன சீதையாகப்' படைத்துள்ளார். இவளுடைய சிந்தனை ராமனுடைய மாற்றமடைந்த சிந்தனை பற்றியது. சக்கிரவர்த்தி என்ற பதவிக் கேற்ற இயல்புகளும், மனிதன் என்ற நிலைக்குரிய இயல்புகளும் எப்படி மாறுகின்றன என்று சீதை சிந்திக்கிறாள். சக்கிரவர்த்திப் பதவி இல்லாதபோது அவள்மீது ராமன் கொண்டிருந்த ஆழ்ந்த காதல், இராவணனை வென்றதும், சக்கிரவர்த்திப் பதவிக்குத் தகுதி பெற்றதும் மாறத்துவங்குகிறது. இராவணன் ஊரில் தங்கிய சீதையைச் சக்கிரவர்த்தி மனைவியாகக் கோசல நாட்டார் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் இராமனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. சீதைக்கு அக்கினிப் பரீட்சை வைக்கறான். சீதை முதல் சோதனைக்கு உடன்படுகிறாள். மீண்டும் சந்தேகம். மீண்டும் தனியாக வன வாழ்க்கை. வான்மீகர் ஆசிரமத்தில் குழந்தைகளோடு வாழ்கிறாள். வான்மீகர் குழந்தைகளை இராமனிடம் அழைத்துப் போகிறார்.

அவர்கள் இல்லாதபோது சீதை தனது வாழ்க்கையின் திருப்பங்களைப் பற்றிச் சிந்தனை செய்கிறாள். இது பெண் - ஆண், உறவு-உரிமைகள் பற்றிய நீண்டகாலச் சிந்தனையின் ஒரு கட்டம். வாழ்க்கை முழுவதையும்பற்றி அவள் சிந்திக்கிறாள். இராமன் சக்கிரவர்த்தி என்ற பாரமான சுமையைத் தலையில் தாங்குமுன் தன்னை எப்படி நேசித்தான்? காணாமற் போன தன்னைத் தேடி எவ்வளவு ஆர்வமாக ஓடி வந்தான். தனக்காக எத்தனை பெரிய போரில், எவ்வளவு வீரம் காட்டினான்? ராவணன் வீழ்ந்ததும், சக்கிரவர்த்தி என்ற பட்டத்-

32/2