பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

19

அழகியல், சமூக இயக்கம் குறித்த விஞ்ஞான விதிகளின் செயல்பாட்டுக்குட்பட்டே நடைபெறுகின்றன.

இயற்கையை மனிதன் மானிடமயப்படுத்துகிறான். தனது உழைப்பாற்றலாலும் அறிவாற்றலாலும் இயற்கையை மாற்றுகிறான். கல்லைச் சிற்பமாக்குகிறான். ஏழு வண்ணங்களில் இருந்து கட்புலனாகும் சித்திர உலகைப் படைக்கிறான். சமூக வரலாற்றின் நிகழ்ச்சிகளில் இருந்து வீரகாவியங்களையும் காதல் காப்பியங்களையும் உருவாக்குகிறான். அப்படி மாற்றும் பொழுது அகவயப்படிமங்களை, புறவயமாக உருவம் கொடுக்கிறான்.

இது கலையில் தெளிவாகத் தோன்றுகிறது. கலையில் மானிடத்தன்மை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ளடங்கியிருக்கிறது. கலைப்படைப்புகள், மானுடப் படைப்புகள். மனித ஆற்றலும் உழைப்பும் நேரடியாகவே சில கலைப் படைப்புகளில் தோன்றுகின்றன.

எல்லாக் கலைப்படைப்புகளிலும் சமூக மனிதன்தான் கலையின் எழுவாய் (பேசப்படும் பொருள்). மனிதன் இயற்கையைச் சமூகத்தின் மூலம் மானிட மயப்படுத்துகிறான். இனக்குழு மக்கள் இனக் குழுச் சமுதாயங்களின் மூலம், மூங்கிலையும் ஈந்தையையும் அழகியல் உணர்வோடு குடிசையாகக் கட்டினார்கள். மூங்கிலைப் பிளந்து அழகான உடைகள் செய்தார்கள்.

இயற்கையை மனிதருக்கு ஏற்ற முறையில் மனிதன் மாற்றுகிறான். இதனைச் சமூகத்தின் மூலம் செய்கிறான். சமூகம் வளர்ச்சி பெறப்பெற இயற்கையைப் பயன்படுத்தும் முறைகள் வளர்ச்சிபெறுகின்றன. பண்டைக் கால மனிதன் கல்லையும் கோடாரியையும் கொண்டு இயற்கையை மாற்றினான். இன்று, வளர்ச்சியடைந்த சக்திகளான மின்சாரம், பலவகை ஒலிக் கதிர்கள், அணுவின் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு இயற்கையை மாற்றுகிறான். மனிதன் இயற்கையின் சக்திகளை வென்று தனது ஆற்றலை அதிகரித்துக்கொண்டு இயற்கையை மானிடவயப்படுத்துகிறான் (humanise).

சமுதாய வளர்ச்சியில் முன்னேறிய மக்கட்குழுக்கள், கல்லால் அரண்மனைகளும் கோயில்களும் கட்டுகிறார்கள், அவற்றில் அவனுடைய அழகுணர்வை வெளிப்படுத்தச் சிற்பங்களைப் படைக்கிறார்கள், உலோக காலத்தில் செம்பாலும் வெண்கலத்தாலும், பயன்பாட்டுப் பொருள்களையும் செப்புப் படிமங்களையும் படைக்கிறார்கள். Lyric கவிதைகளில் கவிஞன் பொருளைப்பற்றித் தன் உணர்ச்சிகளை வெளியிடுகிறான். கீட்ஸ். ஷெல்லி இவர்கள் ஸ்கைலார்க், நைட்டிங்கேல் போன்று