பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நா.வானமாமலை

பறவைகளைப் பார்த்துத் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட்டுள்ளார்கள். பாரதி குயில் பாட்டும் இவ்வகையினதே. பறவைகளை அவர்கள் புகைப்படம் பிடிக்கவில்லை; பறவைகளை வருணிக்கவும் இல்லை. ஆனால் பறவையைக் கண்டதும் கலையுள்ளத்தில் ஊறிவரும் உணர்ச்சிகளை, சமுதாய வாழ்க்கையும் தனிமனித வாழ்க்கையும் தோற்றுவித்த உணர்ச்சியால் தாக்கம் பெற்ற சிந்தனைகளை வெளியிடுகிறார்கள். மனித அனுபவக் கலை வெளியீடுகள்தான், இத்தகைய பாடல்களில் முக்கியமானது; இயற்கைக் காட்சிகளும் பறவைகளும் அல்ல. இச்சிந்தனைகளும் உணர்ச்சிகளும் அகவயமான எழுச்சிகள். அகவய எல்லைக்கு அப்பாற்பட்ட ஸ்கைலார்க்கும், நைட்டிங்கேலும் குயிலும் பண்டைய கிரேக்கப் பாத்திரமும் (ode on a Gracian urn) மனித உணர்ச்சி வெளிப்பாட்டிற்குத் தேவையான புறவய வஸ்துக்கள். இவை அகவயப் படிமங்களாகி உணர்ச்சியோட்டத்தைத் தோற்றுவித்திருக்கின்றன.

லெனினது வரையறுப்பு, மார்க்சீய அழகியல் கொள்கையில் மிகவும் முக்கியமான அம்சம். இது கலைப்படைப்பின் சாரத்தையே பிழிந்து அளிக்கிறது. "புறவயமான உலகை, மனித உணர்வு (உள்ளம்) பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், அதனை (உள்ளத்தில்) படைக்கவும் செய்கிறது." இதன் பொருள் என்ன? உலகைப் பிரதிபலிப்பது மட்டும் கலையின் நோக்கமன்று. மனிதன் இயற்கையை அனுபவத்தின் மூலமும் உள்ளத் தொடர்பு மூலமும், மாற்றுகிற செயல்முறையில், அகவயமான உள்ளம், புறவயமான இயற்கையின்மீது தொழில்படுகிறது. உள்ளத்தின் தூண்டுதலால் மனித உழைப்பும் படைப்பாற்றலும், பல புதிய கலைப்பொருள்களைப் படைக்கின்றன. கவிதையின் தன்மையே அதன் புதுமைதானே! அதுவல்லாதது போலிக் கவிதைதானே! மனித உழைப்பின் பயனாகவும் படைப்பாற்றலின் பயனாகவும் மனிதத் தன்மையின் சாரம், புறவய உலகமாகப் படைக்கப்படுகிறது. இது யதார்த்த உலகின் மீது கலை உள்ளத்தின் போக்கைக் காட்டுகிறது.

மனிதன் என்னும் கருத்து அதற்கு மாறான (மனிதனின் ஆதிக்கத்திற்கு உட்படாத) இயற்கையென்ற எதிர்க்கருத்தையும் உடன்காட்டும். மனிதன் என்னும் கருத்து தன்னைத்தான் உணர்ந்து, புறவயப்படும். புறவய உலகில் தனது செல்வாக்கைச் செலுத்தித் தனது தன்மையைப் பூரணப்படுத்திக் கொள்ளும்.

கொள்கை பூர்வமான (Theoritical) சிந்தனையில், அகவயக் கருத்து சர்வாம்சமானது; அது எல்லை கடந்தது. இது புறவய உலகத்தை எதிர்த்து நிற்கிறது. அதன் தீர்மானமான, எல்லைக்-