பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்பின் ஆக்கம்

21

குட்பட்ட உள்ளடக்கமும் பூர்த்தியாதலும், புறவய உலகத்திலிருந்து கிடைத்து, அகவயமான கருத்தாகி, அதுவே புறவயமான (கலைப்படைப்பு) வஸ்துவாக மாறுகிறது.

இயற்கையும் நடைமுறைத் தொழிலும் (அனுபவம்: இயற்கை, சமூகம்) படைப்புத் தொழில்களனைத்திற்கும் தொடக்கப்புள்ளி என்று கூறலாம். இந்த அம்சம் கலையில், தெளிவாகவே வெளிப்படுகிறது. ரியலிசக் கலையின் எந்தப் படைப்பை எடுத்துக்கொண்டாலும் மானுட அம்சம் அதில் காணப்படும். ஒரு காட்டைச் சித்திரமாக ஓர் ழவியன் வரைகிறான். மனித மனத்திற்கு உவப்பூட்டும் காட்டின் அம்சங்கள் அதில் காணப்படும். மற்றோர் ஓவியன் காட்டில் அச்சமூட்டும் அம்சத்தை உணர்ந்து வெளிப்படுத்துகிறான் என்று கொள்ளலாம். அவனுடைய சித்திரத்தில், கலை உறுப்புக்களும் வண்ணங்களும் அவ்வுணர்ச்சியையே மிகுவித்துக் காட்டக்கூடிய விதத்தில் தீட்டப்பட்டிருக்கும்.

இயற்கையில் மனிதத் தாக்கம் ஏற்பட்டால்தான் அது கலைப்பொருளாகிறது. காட்டைப் புகைப்படமாகக் காட்டுவது போலக் கலைஞன் காட்ட முடியாது. உள்ளத்தை உள்ளதாகவே, மனித உணர்ச்சியின் கலவையில்லாமல் காட்டுபவன் கலைஞனாக மாட்டான். அவனைப் புகைப்படக் கலைஞன் என்றுதான் அழைக்கலாம்.

'தான்' (Ego) என்ற கருத்திலிருந்து தத்துவம் தொடங்காது. அதுபோலவே கலையும் தான் என்ற கருத்தில் இருந்து தொடங்காது. கலையின் தொடக்கப்புள்ளி, புறவயமானதொரு பொருள் அல்லது நிகழ்ச்சிதான். ஆனால் மனித - 'தான்’ இல்லாமல் கலை வளர்ச்சி பெற முடியாது. எழுவாயின் செயல் இல்லாமல் மனிதன் இயற்கையை மாற்றுவதும், இயற்கையால் மாற்றப்படுவதுமான இயக்கவியல் மாற்றங்கள் நிகழமாட்டா. கலைப்படைப்பு நிகழ்ச்சியில் இம்மாற்றங்கள் அழகியல் விதிகளுக்கேற்ப நடக்கின்றன.

மனிதன் செயலற்றவனாக இருப்பதில்லை. பகவத்கீதை, "மனிதன் செயல் புரிந்துகொண்டே இருக்கிறான். அவன் ஆன்மா செயலற்றிருந்தாலும், அவனது இந்திரியங்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்கும்" என்று கூறுகிறது.

நடைமுறையிலும், சிந்தனை பூர்வமாகவும் மனிதன் தன்னை உலகத்தோடு இணைத்துக் கொள்கிறான். இத்தகைய இடையறாத இணைப்பினால் மனிதன் (எழுவாய்) செயல் புரிவதிலும் செயல் பற்றிச் சிந்தனை புரிவதிலும் தன்னம்பிக்கை பெறுகிறான். சிந்தனை செய்யும்பொழுது,