பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நா. வானமாமலை

அவன் எண்ணுகிறான். அதனை அழிக்க விரைந்து கொண்டிருக்கும் உலகத் தொழிலாளர் படையை எறும்புக் கூட்டம் என்று குறியீட்டால் குறிப்பிடுகிறான்.

லெனின் குறியீட்டை ஒருவழிப் போக்காகப் பயன்படுத்துவதையும், அதையே பூதாகாரமாகக் காட்டுவதையும் எதிர்த்தார். மனித உணர்வு, யதார்த்தத்தை நெருங்குவதையே அறிதல் என்று சொல்லுகிறோம். சில நேரங்களில் அதிக நேரம் மாறாத நிலையில் அசைவற்ற நிலையில் பொருள்கள் இருக்கலாம். இவையே முரண்பட்ட செயல்பாடுடைய அகப் பிரதிபலிப்புச் செயல் முறையின் மிக முக்கிய காலங்கள். நிலையானது என்பது மனித சிந்தனையில், மனிதன் சிந்தனைப் பொருள் என்ற முரண்பாட்டைத் தனது மூளையில் தீர்க்கிற நிலையில் ஏற்படும் காலப் பகுதிகள்.

குறியீடுகள் பொருளையும் அதன் படிமத்தையும் ஒன்றாகக் கருதும் கருத்துக்களின் வெளியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது இரண்டையும் பிரித்து அப்பாலைவயமாக ஒன்றையொன்று அந்நியப்படுத்துவதற்குக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிந்தனையும் பொருளும் 'உடனிருப்பு'க் கொண்டுள்ளன. அது ஒரு செயல் முறை (process). உண்மை, சாவு அமைதியில் கிடப்பதாகச் சிந்திக்கக்கூடாது. ஒரு சித்திரம் போல இயக்கமின்றி, ஓர் எண் அல்லது குறியீடு போல சிந்தனைக்கும், பொருளுக்குமிடையே உள்ள தொடர் இல்லை. இது தொடர்ச்சியாக இயக்கவியல் முறையில் நிகழ்கிறது.

கலையின் பரப்பு மிக விரிந்தது. அதனை ஏதாவது ஒரு முறையியலால் அளந்துவிட முடியாது. குறியீட்டு முறை, படிமமுறை, அமைப்பு முறை (Structural method),சைபர்னடிக்முறை இவை யாவும் கலையின் ஒவ்வோர் அம்சத்தை அறியத் துனை செய்யும். ஆனால் ஒவ்வொரு முறை மட்டும்தான் கலையைப் படைக்கச் சிறந்த முறை எனக் கருதுவது குருடர் யானை பார்த்த கதைதான். எல்லா ஆய்வு முறைகளும் குறைபாடுடையவை. ஆயினும் கலையின் தன்மையையறிய இம் முறைகளை விமர்சன நோக்கோடு பயன்படுத்தலாம்.

சமூக ஆய்வும், தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு, வரலாற்றுரீதியான சமூகவளர்ச்சிநிலை, சமூக உற்பத்தியில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளுகிற உறவு இவை பற்றிய அறிவும்தான், புற உலகில் வாழ்கிற மனிதனை நமக்கு உணர்த்தும். கலைஞன் இம்மனிதனை அவன் வாழ்கிற சூழ்நிலையில் இருந்து பிரிக்காமல், அழகியல் விதிகளை உணர்ந்து கலையுலகில் கலையுலக மனிதனாகப் படைக்கவேண்டும்.