பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நா. வானமாமலை

கோள் வழிப்பட்ட வளர்ச்சிப் போக்கையும் ஒருங்கே காட்டவல்ல கலைஞனே சிறந்த கலைஞனாவான்.

ஒரு கதையில் ஜெயகாந்தன், எப்பொழுதுமே அசிங்கமான எண்ணங்களில் ஆழ்ந்திருக்கும் ஓர் இளைஞன் திடீரென்று நிர்வாணமாய் நிற்கும் ஒரு பிச்சைக்காரியைக் கண்டதும், தன்னுடைய ஆடையினால் அவளது நிர்வாணத்தை மறைத்ததை எழுதுகிறார்.

இது சாத்தியமே இல்லை. அழுக்கிலும் அசிங்கத்திலும் புரண்டு கொண்டிருக்கும் மனம், எப்படித் திடீர் மாற்றம் பெறுகிறது? அதனுடைய மனத்தின் அழுக்கினாள், ஒரு சிறந்த மனித இயல்பு மறைந்து கிடக்க வேண்டும். அதன் வளர்ச்சியை ஆசிரியர் காட்டவில்லை. அதன் வளர்ச்சியைக் காட்டாமல் திடீரென்று பிச்சைக்காரியின் நிர்வாணம் இளைஞனது மனத்தை மாற்றியதாகக் கூறுவது அழகியல், இயக்கவியல் விதிகளுக்குப் பொருத்தமாக இல்லை.

ஒரு மாபெரும் வீரச்செயல், திடீர் நிகழ்ச்சியாக இராது. வீரர்கள் சந்தர்ப்பங்களில் உருவாகிறார்கள். அவர்களைச் சமூகக் கல்வியும் சமூக உறவுகளும் வளர்க்கின்றன. தடைகளை மீறி, குறிக்கோளை உறுதியாகக் கடைப்பிடித்து, இடர்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற சாதாரண மனிதன் தான் வீரன்.

லெனின் வீரத்தின் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறான். ஒன்று இயல்பூக்கமானது; இரண்டாவது தினசரி வாழ்க்கையில் வெளிப்படுவது. லெனின் தினசரி என்ற சொல்லிற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கிறார். தினசரித் தொழில்கள் அனைத்தும் வீரத்தன்மை வாய்ந்தவை என்பது லெனினது கருத்து அல்ல. புரட்சிக் காலத்திலும் புரட்சிக்குப் பின்னர் திருமான காலத்திலும் மக்களது தினசரி வேலையின் முக்கியத்துவத்தையே, தினசரித் தொழிலின் வீரம் என்று குறிப்பிடுகிறார். கம்யூனிசம், மனித குலத்தின் உன்னதமான குறிக்கோள். அக்குறிக்கோளை நிறைவேற்ற மக்கள் புரியும் சாதாரணச் செயல்கள் கூட வீரத்தன்மை கொண்டவையாகும். இராமன் அணை கட்டியபோது, அணில் புரிந்த அற்பமான செயலும் பாராட்டுப் பெற்றது போல.

சமூக இயக்கத்தின் வெள்ளப் போக்கால் அடிக்கப்பட்டு அதன் வழியே செல்லும் தனிமனிதன் வீரனல்ல. இயல்பூக்கமான வீரத்தாலும் சமூக உண்ர்வாலும் புரட்சி பற்றிய அறிவாலும் சமூக உணர்வென்னும் வெள்ளத்தை வழிப்படுத்துபவனே வீரன், தன்னைப்பற்றிய உணர்வில்லாமல், குறிக்கோளில் உறுதியும், அதனை நின்றவேற்றும் தினசரிப் பணி