பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலையில் இலட்சியமும் வீரனும்

37

களில் ஈடுபாடும் கொண்டு, மக்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவனே வீரன்.

எக்காலத்திற்கும் பொருத்தமான இலட்சியம் எதுவுமே கிடையாது. இலட்சியங்கள் வளர்ச்சியடைந்து மாறுகின்றன. கார்க்கி, ஓர் இலட்சியம், மற்றோர் இலட்சியத்தால் மாற்றப்படுவது குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:

வாழ்க்கை ஒரு குறிக்கோளால் வழிகாட்டப்பட்டு முழுமையை நோக்கி முன்னேறுகிறது. குறிக்கோள் நடப்பாக இல்லை. இனி வருங்காலத்தில் நடப்பாகக் கூடியது என்ற நம்பிக்கையில் ஒரு குறிக்கோள் நிலைத்திருக்கிறது. அதனை மனிதன் அடைய முடியும் என்ற நம்பிக்கை, மனிதனைக் குறிக்கோளை அடையும் முயற்சியில் ஊக்குவிக்கிறது.

யதார்த்தம் என்பதே மனிதக் குறிக்கோள்களின் புறவயமான வெளிப்பாடுதான். நிகழ்கால நடப்பு, குறிக்கோளைப் பின்பற்றி மனிதன் செயல்படுவதால் மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட நடப்பு நிலையில் குறிக்கோள் நமக்குத் திருப்தியளிக்காவிடில், குறிக்கோளையும் நாம் மாற்றிக்கொள்கிறோம். நடப்பு, கற்பனையை மாற்றுகிறது. இவ்வாறு குறிக்கோள்கள் வளர்ந்து மாறுகின்றன.

மாறாத, என்றும் உள்ள குறிக்கோள்கள், எல்லாக் காலத்திற்கும், எல்லா வர்க்கங்களுக்குமாக இருப்பதில்லை.

எழுத்தாளன் தனது வாழ்க்கையனுபவத்தில் இருந்து - வீரனது அம்சங்களைத் தேர்ந்தெடுத்து வீரப் படிமத்தைப் படைக்கிறான். அப்படிமத்தின் உயிரின் சாரமாகக் குறிக்கோள் ஒளிர்கிறது. கார்க்கி எழுதுகிறார்:

மனிதனுக்கு ஒரு வீரன் மீது ஈடுபாடு தேவை. ஒவ்வொரு யுகத்திலும் அக்காலத்தின் சிறந்த பண்புகள், காலத்திற்குத் தேவையான நலன்கள் இவற்றின் உருவகமாக வீரர்கள் தோன்றியுள்ளார்கள். நடப்பியல் மக்களிடம் ஓரளவு காணப்படும் பண்பு நலன்கள், வீரனிடம் மிகைப்பட்டுக் காணப்படும். நம் காலத்தில் இருந்து வருங்காலத்திற்குச் செல்லுகிற பாதையில் ஒளி பாய்ச்சும் குறிக்கோளை நடப்பியலாக்கும் முயற்சியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களே வீரர்கள்.