பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நா. வானமாமலை


பரசுராமனின் வளர்ச்சி பற்றி ஒரு கன்னடக் கதைப்பாடல் உள்ளது. ஒரு வயதாகும் பொழுது அவன் ஓர் அடி வைத்தால் ஒரு மைல் கடப்பானாம்; இரண்டு வயதாகும் போது ஓர் அடி வைத்தால் இரண்டு மைல் கடப்பானாம்...இப்படியே வயதின் விகிதத்தில் கடக்கும் தூரமும் அதிகரிக்குமாம். வளர்ச்சியையும் வலிமையும் இணைத்துக் கன்னட நாட்டுப்புற மக்கள் உருவாக்கிய கற்பனைப் படிமம் இது. இது போலக் கிரேக்கப் படிமங்கள், பாபிலோனியப் படிமங்கள், சீனப் படிமங்கள், இந்தியப் படிமங்கள் என்று பல உள்ளன.

சுரண்டும் கும்பலின் நன்மைக்காக இலக்கியம் படைப்பவர்கள் அவர்களின் நலனுக்காக, உலக மக்கள் பல நூற்றாண்டுகளாக படைத்துள்ள உன்னதமான மானுட மதிப்புகளையும் மேண்மையானது, அற்புதமானது எனப் போற்றப்படும் மதிப்பீடுகளையும் அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த முதலாளித்துவக் கலைக் கயவாளிகளையும், தங்கள் பணப்பையை நிரப்ப, மனிதப் பண்பாட்டையும் இயல்பியக்கப் போக்கையும், நாற்றமடிக்கச் செய்கிற, மனச்சாட்சியை முப்பது வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்ட இலக்கிய ஜூடாஸ்களையும் எதிர்த்து மார்க்சீய முற்போக்கு டாங்கிகளும் விமானப் படைகளும் கிளம்பியுள்ளன. ஈயை நசுக்க, சம்மட்டியா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், முதலாளித்துவ நச்சு இலக்கியவாதிகள் பரப்பியுள்ள நஞ்சு மிகவும் ஆபத்தானது. உலக இலக்கிய வானத்தையே அசுத்தப்படுத்தி, மக்களின் நேர்மையான, ஆரோக்கியமான மனிதத் தன்மையை அழித்துவிடும். எனவே, வலுவான கலைப்படை ஒன்று உருவாகியுள்ளது. அது முற்போக்குக் கலைத் தத்துவம், மார்க்சீய அழகியல் சிந்தனை என்ற இரட்டைக் கொடியோடு போர் முனையில் நிற்கிறது.

மார்க்சீய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. 'அறிதல் முறைகளை' சுரண்டும் வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச்சக்திகள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றன. இதனால் சிந்தனைகள் மாறின. இம்மாற்றம் சிந்தனைப் போராட்டங்களைக் கூர்மையாக்கியது. விஞ்ஞானிகள் இரு பிரிவாகப் பிரிந்து 'பொருள் அழிகிறதா? பொருள் பற்றிய நம்முடைய கருத்து மாறுகிறதா?' என்ற கேள்விகளுக்கு விடை காணப் போராடினார். குழப்பம் மிகுந்தது. குழப்பத்தை மிகுவிக்கவே,