பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

நா. வானமாமலை

போராடும் பொழுதும் கிடைத்த அறிவுத் திரளின் மீது ஆதாரப்பட்டு டால்டனும் அவர் காலத்து விஞ்ஞானிகளும் சிந்தித்தார்கள். எனவே அவர்கள் முழு உண்மைக்கு நெருக்குமாக வந்தார்கள். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் கதிர் வீச்சு, அணுப் பிளப்பு, அணு மின்னேற்றம் முதலிய புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்புதிய உண்மைகளின் அடிப்படையில் அணுவின் அமைப்பு பற்றிய பல விஞ்ஞானக் கருத்துப் படிமங்களை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இவ்வாறு ரூதர் போர்ட் மாடல், போர் மாடல் முதலிய படிமங்கள் உருவாயின. மேலும் பல படிமங்கள் அணுத் துகள்களின் இயக்கம் பற்றிய அறிவினால் உருவாக்கப்பட்டன.

இக்காலத்தில் விஞ்ஞானத் தொழில் நுணுக்கப் புரட்சி மிகப் பெரிய அளவில் பரவியபொழுது, புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அணுவைப் பற்றிய கருத்துப் படிமம் உருவாயிற்று. தற்காலக் கருத்துப் படிமம், டால்டன் காலத்திலோ அல்லது அவர்களின் முன்னோர் காலத்திலோ தோன்றியிருக்க முடியாது. இதனால்தான் நமது அறிவு முழு உண்மையை அடையும் நெருக்கத்தின் அளவு வரலாற்றுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்று கூறுகிறோம். மனிதனுடைய சிந்தனையில், இயற்கையின் பிரதிபலிப்பு உயிருட்டமின்றி, சுலபமாக இருப்பதில்லை. அது இயக்க பூர்வமானது; முரண்பாடு கொண்டது. இடையறாத இயக்கத்தில் தோன்றும் முரண்பாடுகளும் அவற்றின் தீர்வுகளும் மனிதனது உள்ளத்தில் பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றன.

இது தொடர்பாக லெனின், கற்பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கவிஞனுக்கு மட்டுமல்லாமல் கணித இயலாருக்கும் கற்பனை முக்கியமானது என்பதை லெனின் விளக்கினார். ஆனால் அது உண்மையின் மீது ஆதாரப்பட்டிருக்கவேண்டும். அது உண்மையின் பிரதிபலிப்பின் ஒரு வடிவமாக இருக்கவேண்டும். உண்மையிடமிருந்து தனது தொடர்புகளை அறுத்துக் கொண்டு உண்மைக்கு மேலாக அது பறந்துவிடக் கூடாது. மனிதன் ஒரு சமூக உயிர். உண்மையை அந்நிலையிலேயே அவன் அறிகிறான். இதன் காரணமாகவே அவனது உணர்வு, உலகைப் பிரதிபலிக்கும் ஓர் உயிரற்ற கண்ணாடியுடன் ஒப்பிட முடியாதது. உண்மையை அறியும்போது அதன் வளர்ச்சியை அவன் பாதிக்கிறான். ஒரு வர்க்கம் அல்லது சமூக சக்தியின் பக்கத்தில் நிலை கொள்கிறான். எனவே அவனுடைய அறிவு ஒரு வர்க்கம் அல்லது சமூக சக்தியின் நிலைகளிலிருந்து எழுகிறது.