பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மரபும் மாற்றமும்

பண்டைக் காலத்திலிருந்து இன்றுவரை இலக்கியத்தில், விவாதத்திற்குரிய பிரச்சினையாக மரபும் மாற்றமும் இருந்து வருகிறது.

மரபு என்பது கலைகள் தோன்றிய காலத்தில் இருந்து ஆற்றோட்டமாகப் பாய்ந்து வருகிற சிற்சில அம்சங்களின் தொடர்ச்சி. மாற்றம் என்பது வரலாற்று ரீதியான வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்ப அத்தொடர்ச்சியினின்று முரண்பட்டுத் தோன்றுகிற புதுமை.

இவையிரண்டும் இயக்கவியல் ஒருமையாக உள்ளன. உதாரணமாகப் பண்டைய செம்மை மரபில் இருந்து கற்பனாவாதமும் அதிலிருந்து யதார்த்தவாதமும் தோன்றியிருக்கிறது. ஒன்றில் இருந்து மற்றொன்று தோன்றுவது முட்டையினுள் குஞ்சு வளர்வது போலாகும். கரு வளரும்போது, முட்டையினுள் இருக்கும் உணவை உட்கொண்டு, தன் மயமாக்கி வளருகிறது. பழமையைத் தன்மயமாக்கிக் கொண்டு புதுமை வளர்கிறது. புதுமை தனித்தன்மையடைந்து குஞ்சாக மாறுகிறது. ஆனால் குஞ்சினுள் உணவு புதிய ரசாயன மாற்றங்கள் பெற்று இரத்தமாகவும் உறுப்புகளாகவும் மாறியிருக்கிறது. மரபுக்கும் மாற்றத்திற்கும் உள்ள உறவு இத்தகைய இயக்கவியல் மாற்றமேயாகும்.

இது போன்றே பண்டைக் குழுவினரின் கலை மரபு, பின் வரலாற்றுக் காலச் சமுதாயத் தேவைகளுக்கேற்ப மாற்றங்களுக்குள்ளாயிற்று. புதுமை, பழமையினின்றும் தனது வளர்ச்சிக்கேற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொள்ளுகிறது.

ஒரு கலைஞன், தனது காலத்திற்கு முன்பே படைக்கப்பட்ட கலைப் பொருள்களின் நடுவே வாழ்கிறான். அவன் தன் காலத்து மக்களின் வாழ்க்கையை நேரடியாக அறிகிறான். தனது முன்னோர்களின் வாழ்க்கையை, வரலாற்று மூலங்களான தொல் பொருள் இயல், வரலாற்றுச் சமூகவியல், வரலாற்று ஆவணவியல் ஆகிய அறிவியல்களில் இருந்து அறிந்து கொள்ளுகிறான். அதுமட்டுமன்று. தன்னைச் சூழ்ந்துள்ள பண்டைக் காலம் முதல் தற்காலம்வரை மனிதன் படைத்துள்ள கலைப் படைப்புகளையும் அறிந்து கொள்ளுகிறான். அதாவது கலையின் வரலாற்றைக் கற்றுக் கொள்ளுகிறான்.