பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

நா. வானமாமலை


மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோர்களது உலகக் கண்ணோட்டத்தின் செல்வாக்கிலும் மார்க்சிம் கார்க்கியின் சோஷலிஸ்டு ரியலிசப் படைப்பு முறையின் தாக்கத்திலும் இலக்கியம் படைத்தால் அது ஸ்டாலின் கட்டளையின்படி படைப்பதாம்.

இந்திய நாட்டில் முற்போக்கு இலக்கியவாதிகளின் அமைப்பு உள்ளது. இதில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பல தத்துவங்களின் சார்பாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சமூகத்தையும் சமூகத்தில் மனித உறவுகளையும் ஆய்ந்து, சமூக நியதிகளின்படியே சமூகத்தைச் சோஷலிஸ்டு உலகமாக மாற்றவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள்.

குறிக்கோளற்ற, சுதந்திரமான இலக்கியம் படைப்பதும், ஆனால் முதலாளித்துவ அமைப்பை மறைமுகமாகப் பாதுகாப்பதற்கு உதவியாக அதன் நிலையான தன்மை பற்றிய மாயைகளை எழுதுவதும், சமூக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என்ற கருத்துக்களைத் தாக்குவதும், இவர்கள் யாருக்குப் பணி புரிகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. நவீனத்துவவாதிகள், சமூகப் போராட்டத்தில் சுதந்திரமாக நிற்பதாக முரசு கொட்டிக் கொண்டு மக்களை நசுக்குகிற, அடிமைப்படுத்துகிற சக்திகள் முதலாளித்துவமும் புதிய கலோனியலிசமும் என்று அறியாமல், அதை எதிர்த்துப் போராடுகிற சக்திகளோடு சேர்ந்து நின்று தங்கள் இலக்கியங்களை அவர்கள் விடுதலைக்கு அர்ப்பணிக்காமல் இருப்பதே அவர்கள் சார்புத் தன்மையைக் காட்டிவிடுகிறது.

பாரதப் போரில் பீஷ்மர், துரியோதனனது செயல்களைச் சொல்லால் எதிர்த்துக் கொண்டே நடைமுறையில் அவனுடைய கட்சியில் போராடுகிறார். கும்பகருணனும் இந்திரசித்தும், சீதையை இராவணன் சிறையெடுத்தது தவறென்றும், இராமனிடம் அவளை ஒப்படைத்துவிடுவதே இலங்கையை அழியாமல் காப்பாற்றுகிற வழியென்றும் வெளிப்படையாக இராவணனிடமே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் 'வீரம்', 'செஞ்சோற்றுக் கடன்' என்ற வீரயுகக் கருத்துக்களின் செல்வாக்கால் இராவணனுக்காகப் போராடி மாய்கிறார்கள்.

விபீஷணன் தான், இராவணனது செய்கை அதருமம் என்று கருதி அவனிடமே அதனைக் கூறி, அவனுடைய பிடிவாதத்தைக் கண்டு, தனது 'தருமக் கருத்தை'ப் பின்பற்றவும் இலங்கையைக் காப்பாற்றவும், தருமத்தோடு போய்ச் சேர்ந்து விடுகிறான். வீரயுகச் சமுதாயக் கருத்துக்களின்படி இவன் துரோகி. ஆனால் வீரயுகக் கருத்துக்களில் இருந்து, 'வலிமையே